கொளத்தூர்:
வில்லிவாக்கம், வடக்கு ஜெகநாதன் தெருவில் நேற்று அதிகாலை ஒரு வீட்டு முன்பு நிறுத்தி இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் திடீரென தீப்பற்றி எரிந்தது.
இது குறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தபோது அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (22) என்பவர் மொபட்டுக்கு தீ வைத்து செல்வது தெரிந்தது. இதையடுத்து ராஜேசை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் கூறும் போது, ‘அப்பகுதியில் உள்ள இளம்பெண்ணை 7 வருடமாக காதலித்தேன்.
கடந்த 3 மாதமாக காதலி பேசவில்லை. எனவே காதலியை பழிவாங்க அவளது மொபட்டுக்கு தீ வைத்து சென்றேன். இதில் அருகில் இருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் எரிந்து போனது’ என்று தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிள்கள் தீ வைப்பதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து ராஜேசிடம் விசாரணை நடந்து வருகிறது.