கைது 
செய்திகள்

ஆசாரிபள்ளத்தில் நண்பரை கொன்ற வாலிபர் கைது

ஆசாரிபள்ளத்தில் முன்விரோத தகராறில் நண்பரை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

நாகர்கோவில்:

நாகர்கோவில் அருகே கீழ ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்தவர் அலெக்ஸ்ராஜ் என்ற பிரேம் (வயது 38). அதே பகுதியை சேர்ந்தவர் புருஷோத் (வயது 28). இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்களுக்கிடையே ஏற்கனவே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று இரவு பிரேம் அந்த பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது புருஷோத்துக்கும், பிரேமுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். பிரேம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த புருஷோத் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

தகவல் அறிந்த ஆசாரிப்பள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணமாக கிடந்த பிரேமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து புருஷோத்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட புருஷோத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த மே மாதம் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்ட பிரேம் மற்றும் அவரது சகோதரர்களை புருஷோத் மற்றும் நண்பர்கள் தாக்கியுள்ளனர்.

இதுதொடர்பாக ஆசாரிப்பள்ளம் போலீசார் புருஷோத் உள்பட சிலர் மீது கொலை முயற்சி வழக்குபதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை வாபஸ்பெற கோரி புருஷோத்திற்கும், பிரேமிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று இரவு ஏற்பட்ட தகராறில் புருஷோத், பிரேமை தாக்கியதில் பலியாகியுள்ள தகவல் தெரியவந்துள்ளது.

கொலை வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.