கைதான விக்னேஷ் 
செய்திகள்

வீட்டு வாடகைக்காக சிறுவன் கடத்தி கொலை - வாலிபர் கைது

ஆம்பூரில் வீட்டு வாடகை பணம் ரூ.2 ஆயிரத்திற்காக சிறுவனை கொலை செய்து கிணற்றில் வீசிய கொடூர வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

சான்றோர்குப்பம் தேசிய நெடுஞ்சாலையோரம் இருக்கும் தியேட்டர் பின்புறம் உள்ள காலி மனையில் ஏராளமான இளைஞர்கள் தினமும் மாலையில் கபடி விளையாடுவார்கள்.

சிறுவன் கிஷோர்குமாரும் கபடி விளையாட்டை வேடிக்கை பார்ப்பது வழக்கம். கடந்த 5-ந் தேதி கபடியை வேடிக்கை பார்க்க சென்ற கிஷோர்குமார் திடீரென மாயமானான்.

பெற்றோர், உறவினர்கள் பல இடங்களில் சிறுவனை தேடினர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. சிறுவன் கடத்தப்பட்டிருக்கலாம் என ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில், சினிமா தியேட்டர் பின்புறமுள்ள புதர் மண்டிய பாழடைந்த கிணற்றில் இருந்து நேற்று முன்தினம் அழுகிய நிலையில் கிஷோர்குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

டவுன் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவன் கிஷோர் குமார் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிற கோணத்தில் அழகாபுரி கோவில் தெருவை சேர்ந்த ராஜா மகன் விக்னேஷ் (20) என்ற வாலிபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அதில், கிஷோர்குமாரை கழுத்து நெரித்து கொன்று உடலை கிணற்றில் வீசியதாக விக்னேஷ் ஒப்புக் கொண்டான்.

போலீஸ் விசாரணையில் கிடைத்த ‘பகீர்’ தகவல்கள் நெஞ்சை பதற வைப்பதாக உள்ளன. அதன் விபரம் வருமாறு:-

5-ந் தேதி மாலை தியேட்டர் பின்புறம் உள்ள காலி இடத்தில் கிஷோர்குமார் கபடி விளையாட்டை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான். கபடி விளையாடிய வினோத் என்ற வாலிபர் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை கிஷோர்குமாரிடம் கொடுத்துள்ளார்.

செல்போனை கையில் வைத்திருந்த கிஷோர்குமார், தாகம் எடுக்கிறது. வீட்டிற்கு சென்று தண்ணீர் குடித்து விட்டு வருகிறேன் என்று அங்கிருந்தவர்களிடம் கூறி விட்டு, செல்போனையும் எடுத்துச் சென்றான்.

வீட்டிற்கு செல்லும் வழியில் தான் ‘கொலையாளி’ விக்னேஷ் எதிரில் வந்துள்ளான்.

சிறுவனிடம் இவ்வளவு பெரிய செல்போனா? என்று விக்னேஷ் வாயை பிளந்தான். செல்போனை பறிக்க திட்டமிட்டான். சிறுவனிடம் நைசாக பேசி பார்த்தான்.


கிஷோர்குமார்

பிறகு, செல்போனை பறித்துக் கொண்டு சிறுவனின் உடலை தோலில் சுமந்துக் கொண்டு, தியேட்டரில் இருந்து சிறிது தொலைவில் உள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசி விட்டு தப்பிச் சென்றான்.

இரவு நீண்ட நேரமாகியும் சிறுவன் வீட்டிற்கு வராததால் பெற்றோர் தேடி பார்த்தனர். அவர்களுடன் சேர்ந்து, கொலையாளி விக்னேஷூம் சிறுவனை தேடுவது போல் நாடகமாடி ஆறுதல் கூறி தேடும் பணியில் ஈடுபட்டு வந்தான்.

சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிலரை மிட்டாளம், ஊட்டல், கோவிந்தாபுரம் என பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று சிறுவனை தேடினான்.

மேலும், சிறுவன் மாயமானதாக பெற்றோர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோதும், கொலையாளி விக்னேஷூம் உடன் சென்றான்.

சிறுவன் புகைப்படம் அடங்கிய போஸ்டரையும் ஆம்பூர் சுற்றுப்புற பகுதிகளில் சென்று ஒட்டினான். இதனால், கொலையாளி விக்னேஷ் மீது யாருக்கும் சிறிதளவு சந்தேகம் கூட வரவில்லை.

இதையடுத்து, சிறுவனிடம் இருந்து பறித்த செல்போனை, அஜீத் என்ற தனது நண்பனிடம் ரூ.2 ஆயிரத்திற்கு விற்றான்.

அந்த பணத்தை எடுத்துச் சென்று வீட்டு வாடகை கொடுத்தான். விற்கப்பட்ட செல்போனின் பாஸ்வேர்ட் தெரியாததால் செல்போனுக்கு சொந்தகாரரிடமே சென்று கொலையாளி விக்னேஷ் பாஸ்வேர்ட் கேட்டுள்ளான்.

பாஸ்வேர்ட் உனக்கு எதற்கு என்று கேட்டவுடன் விக்னேஷ் மழுப்பலாக பேசி அங்கிருந்து சென்று விட்டான்.

மேலும், கிணற்றில் ஒருவர் விழுந்தால் பிணம் எவ்வளவு நேரத்தில் மேலே வரும் என்று பலரிடம் கேட்டுள்ளான். இந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு சிறுவனின் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.

தவளை தன் வாயால் கெடும் என்பதை போல், குடித்து விட்டு மதுபோதையில் தள்ளாடியபடி வீதியில் சுற்றித்திரிந்த விக்னேஷ், ‘அய்யோ கிஷோர்குமார் நீ என் உயிரடா, என்னை விட்டு போய் விட்டாயே’ என்று கதறினான்.

அதன்பிறகே, பலருக்கு விக்னேஷ் மீது சந்தேகம் வந்தது. சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், நேற்று போலீஸ் நிலையம் சென்று விக்னேஷ் மீது சந்தேகம் இருப்பதாக கூறினர்.

விக்னேஷை போலீசார் பிடித்து விசாரித்தபோது தான் ரூ.2 ஆயிரம் வீட்டு வாடகைக்காக சிறுவனை கொன்று செல்போனை பறித்து கொண்டு உடலை கிணற்றில் வீசியது தெரிய வந்தது. அவனை போலீசார் கைது செய்தனர்.

கொலையாளி விக்னேஷ் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளான். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 18 வயது நிரம்பாத மைனர் பெண் மீனாட்சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள். இதனால் பெண் வீட்டில், இந்த காதல் திருமணத்தை ஏற்கவில்லை.

இதனால், வாடகை வீடு எடுத்து காதல் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். 1½ வயதில் சுஜீத் என்ற ஆண் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை.

சிகிச்சை அளிக்கவும் பணம் இல்லை. வாடகை செலுத்தவும் வழியில்லை. இந்த நிலையில் தான், இந்த கொடூர செயலை விக்னேஷ் அரங்கேற்றியுள்ளான்.