பொள்ளாச்சி பஸ்நிலையம் அருகே உள்ள மில் ரோடு பகுதியில் எச்.டி.எப்.சி. வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் இங்கு வந்த ஒரு வாலிபர் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றபோது மும்பையில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு மெசேஜ் சென்றது.
இதையடுத்து உஷாரான வங்கி அதிகாரிகள் இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அந்த நேரத்தில் பணம் எடுக்க முடியாததால் மர்மநபர் ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்தி விட்டு சென்று விட்டார்.
அப்போது அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் வாலிபர் ஒருவர் காரில் இருந்து இறங்கி முகத்தை பாதியளவு மூடியபடி ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்து கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் கார் பதிவு எண்ணை வைத்து பொள்ளாச்சி பகுதியில் உஷார்படுத்தினர். அப்போது குறிப்பிட்ட காரை போலீசார் சுற்றிவளைத்து மடக்கினர்.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இவருக்கு வேறு ஏ.டி.எம். கொள்ளை வழக்கிலும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.