செய்திகள்

இளம்பெண்ணை கடத்திய வழக்கில் தேடப்பட்ட வாலிபர்கள் 2 பேர் மீது போலீசார் துப்பாக்கி சூடு

இளம்பெண்ணை கடத்திய வழக்கில் தேடப்பட்ட தர்மபுரி வாலிபர்கள் 2 பேர் மீது பெங்களூரூ போலீசார் இன்று காலை துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 2 பேரும் குண்டு பாய்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மாலை மலர்

தர்மபுரியை சேர்ந்தவர்கள் சங்கர் (வயது 25). ,செல்வகுமார் ( 35). இவர்கள் இருவரையும் இளம்பெண் ஒருவரை கடத்திய வழக்கில் பெங்களூரூ ஓயிட் பீல்டு போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் இவர்கள் 2 பேரும் இன்று காலை தமிழக பதிவு எண் கொண்ட காரில் பெங்களூருவில் இருந்து தமிழக எல்லை நோக்கி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் போலீசார் காரை விரட்டிச்சென்றனர். சர்ஜபுரா சாலை அருகே போலீசார் அந்த காரை வழிமறித்தனர்.

2 பேரும் போலீசில் சரண் அடையுமாறு கூறினார்கள். ஆனால் அவர்கள் சரண் அடைய மறுத்து விட்டனர்.

மேலும் போலீசாரை தாக்க முயன்றனர். இதனால் போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டனர்.இதில் 2 வாலிபர்கள் காலிலும் குண்டு பாய்ந்தது. அதன் பிறகு துப்பாக்கி முனையில் அவர்களை பிடித்து ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் கையில் காயம் ஏற்பட்டது. அவரும் காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.