சென்னை:
தமிழகம் முழுவதும் போலீசார், தீயணைப்பு படையினர், சிறை காவலர்கள் உள்ளிட்ட பணியிடங்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு கடந்த மாதம் நடந்தது.
சென்னை உள்ளிட்ட 32 மாவட்டங்களில் 410 மையங்களில் 4 லட்சத்து 82 ஆயிரம் இந்த தேர்வை எழுதினார்கள். இதுவரை நடைபெற்ற தேர்வுகளிலேயே இந்தமுறை தான் அதிகம் பேர் பங்கேற்றார்கள்.
இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு இன்று நடந்தது. சென்னை உள்ளிட்ட 15 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
சென்னையில் இன்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானாத்தில் உடல் தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக 1000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 900 பேர் கலந்து கொண்டனர். இதற்காக அதிகாலையிலேயே அவர்கள் குவிந்தனர்.
அவர்களுக்கு முதலில் சாதாரண நிலையிலும், பின்னர் விரிந்த நிலையிலும் மார்பு அளக்கப்பட்டது. இதில் பலர் வெளியேறினர். 700-க்கும் மேற்பட்டவர்கள் இதில் வெற்றி பெற்று அடுத்தகட்ட போட்டியில் பங்கேற்றனர்.
அவர்களுக்கு 1500 மீட்டர் ஓட்டபந்தயம் வைக்கப்பட்டது. இதில் இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஓடினர். பலர் பாதியிலேயே வெளியேறினர். 7 நிமிடத்திற்குள் 4 ரவுண்டுகள் மைதானத்தை ஓடி முடிக்க வேண்டும். ஒரு சிலர் கடைசி ரவுண்டில் சில நிமிடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.
அது போன்று வெளியேறியவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். ஓட்டபந்தயத்தில் பங்கேற்றவர்களை பணியில் இருந்த பெண் போலீசார் கை தட்டி ஊக்கப்படுத்தினார். இந்த உடல் தகுதி தேர்வு தொடர்ந்து 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. அன்று 530 பெண்கள் பங்கேற்கிறார்கள்.
இது முடிந்த பின்னர் உடல் திறன் போட்டிகள் ஆகஸ்ட் 4-ந்தேதி வரை நடக்கிறது. இதில் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படும்.