செய்திகள்

திருப்பூரில் இளம்பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற வாலிபர் கைது

திருப்பூரில் நடுரோட்டில் இளம்பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அனுப்பர்பாளையம்:

திருப்பூரில் நடுரோட்டில் இளம்பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் பாண்டியன்நகரை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளியின் 25 வயது மனைவி தனது குழந்தையை நேற்று காலை பள்ளியில் விட்டு விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

அப்போது வாலிபர் திடீரென்று அந்த பெண்ணை கட்டிப்பிடித்து மானபங்கம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சல் போட்டார். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அந்த வாலிபரை விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து சென்ற போலீசார் பொதுமக்கள் பிடியில் இருந்து அந்த வாலிபரை மீட்டனர்.

பின்னர் அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அந்த வாலிபர் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த மோகன்குமார் (வயது 27) என்பதும், அவர் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்குமாரை கைது செய்தனர். திருப்பூரில் நடுரோட்டில் நடந்து சென்ற பெண்ணை கட்டிப்பிடித்து மானபங்கம் செய்ய முயன்ற வாலிபரை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.