செய்திகள்

ஈத்தாமொழி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து வாலிபர் பலி: 2 பேர் படுகாயம்

ஈத்தாமொழி அருகே மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாகர்கோவில்:

ஈத்தாமொழி அருகே தெற்கு சூரங்குடி திக்கிலான் விளையைச் சேர்ந்தவர் அழகேசன். இவரது மகன் சிவராமன், (வயது 19), பாலிடெக்னிக் படித்துள்ளார்.

தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை தேடி வந்தார். நேற்று மாலை சிவராமன், தனது தந்தையின் மோட்டார் சைக்கிளில் வடக்கு சூரங்குடியைச் சேர்ந்த தனது நண்பர்கள் செல்வம் (23), ரபீஸ் (19) ஆகியோரை அழைத்துக் கொண்டு சென்றார்.

மோட்டார் சைக்கிளை சிவராமன் ஓட்டினார். வத்தக்காவிளை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் அவரது கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. திடீரென மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இதில் சிவராமன், செல்வம், ரபீஸ் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

சிவராமனுக்கு தலை மற்றும் உடல் பகுதியில் இருந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து 3 பேரையும் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சிவராமனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிவராமன் பலியானது பற்றி தகவல் கிடைத்ததும், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவரது உடலை பார்த்து அவர்கள் கண் கலங்கினார்கள்.

சிவராமனின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. விபத்து குறித்து ஈத்தாமொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.