செய்திகள்

மதுரையில் வாலிபரை தாக்கி 3 பவுன்-பணம் பறிப்பு

மதுரையில் வாலிபரை தாக்கி 3 பவுன் நகை மற்றும் பணத்தை ஷேர்ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் பறித்து சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மாலை மலர்

மதுரை:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்தவர் உதயகுமார் (வயது30). பிரசவத்திற்காக இவரது மனைவியை மதுரை நெல்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்.

நேற்று இரவு ஊரில் இருந்து மதுரை எம்.ஜி.ஆர். பஸ் நிலையம் வந்து இறங்கிய உதயகுமார் ஆஸ்பத்திரி செல்வதற்காக ஷேர் ஆட்டோவில் ஏறினார். நள்ளிரவு என்பதால் அவர் மட்டுமே பயணம் செய்தார்.

இந்த நிலையில் ஷேர் ஆட்டோ நெல்பேட்டைக்கு செல்லாமல் செல்லூர் பகுதியில் உள்ள மீனாட்சி புரம் விலக்கு சென்றது. அங்கு ஆட்டோ டிரைவர் தனது கூட்டாளிகள் 2 பேருடன் சேர்ந்து கொண்டு உதயகுமாரை தாக்கினர்.

தொடர்ந்து அவரிடம் இருந்த செல்போன், 2½ பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினர்.

இதுகுறித்து செல்லூர் போலீசில் உதயகுமார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை -பணத்தை பறித்த 3 பேரை தேடி வருகிறார்கள்.