தற்கொலை 
செய்திகள்

பொள்ளாச்சி அருகே கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை- காப்பாற்ற சென்ற அண்ணனும் பலி

பொள்ளாச்சி அருகே பெற்றோர் சண்டை போட்டதால் வேதனை அடைந்த இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். காப்பாற்ற சென்ற அண்ணனும் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவரது மனைவி வேலுமணி. இவர்களுக்கு அருண்குமார் (வயது 25) என்ற மகனும், சித்ரா (17) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் மதுக்கரை வழுக்குப்பாறையில் உள்ள செந்தில்குமார் என்பருக்கு சொந்தமான தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தனர்.

அடிக்கடி முத்துசாமி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தனது மனைவி வேலுமணியிடம் தகராறு செய்து வந்தார். நேற்று இரவு குடித்து விட்டு வீட்டுக்கு வந்த முத்துசாமி தனது மனைவியிடம் தகராறு செய்தார்.

இதனை வீட்டில் இருந்த அவர்களது மகள் சித்ரா, மகன் அருண்குமார் ஆகியோர் தடுத்தனர். ஆனால் எதையும் காதில் வாங்கி கொள்ளாத முத்துசாமி தனது மனைவியை அடித்து உதைத்தார். இதனால் மனவேதனை அடைந்த சித்ரா வாழ்க்கையில் விரக்தி அடைந்து தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அருண் குமார் தனது தங்கையை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்தார். 2 பேருக்கும் நீச்சல் தெரியாததால் இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கும் மதுக்கரை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இருந்து அருண்குமார், சித்ரா ஆகியோர் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அண்ணன்- தங்கை கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.