தற்கொலை 
செய்திகள்

பேரளம் அருகே விஷம் தின்று இளம்பெண் தற்கொலை- உதவி கலெக்டர் விசாரணை

பேரளம் அருகே விஷம் தின்று இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே உள்ள பூங்காவூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சஞ்சீவன். கொத்தனார். இவரது மனைவி சத்யா (வயது20). இவர்களுக்கு 4 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த சத்யா சம்பவத்தன்று எலிமருந்தை (விஷம்) தின்றார். 

இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரது குடும்பத்தினர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சத்யாவின் தந்தை குணசீலன் பேரளம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சத்யாவுக்கு திருமணம் ஆகி 1 1/2 ஆண்டே ஆவதால் திருவாரூர் உதவி கலெக்டர் பாலசந்திரன் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.