உளுந்தூர்பேட்டை:
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27) கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த உறவினரான தவமணி (24) என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கணவனும், மனைவியும் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மணிகண்டனுக்கும் தவமணிக்கும் இடையே குடும்பதராறு ஏற்பட்டது.
நேற்று இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த மணிகண்டன், மனைவியை அடித்து உதைத்து கீழே தள்ளினார். தரையில் விழுந்த தவமணி மயங்கி விழுந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
மனைவி இறந்து போனதை அறிந்த மணிகண்டன் அதிர்ச்சி அடைந்தார். பின்பு அவர் இறந்து கிடந்த மனைவியின் உடலை தூக்கி வீட்டில் உள்ள மின்விசிறியில் கயிற்றில் கட்டி தொங்கவிட்டார்.
பின்னர் அவர் தனது மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூச்சல் போட்டு அலறினார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தூக்கில் தொங்கிய தவமணியின் உடலை கீழே இறக்கினர். இறந்து போன தவமணியின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.
இதற்கிடையே தவமணி இறந்த தகவல் அவரது உறவினர்களுக்கு தெரியவந்தது. அவர்களும் குணமங்கலம் கிராமத்திற்கு விரைந்து சென்று தவமணியின் உடலை பார்த்து அழுதனர்.
அப்போது அங்கிருந்த தவமணியின் கணவர்மணிகண்டன் மீது உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் எடைக்கல் போலீசில் புகார் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் எழிலரசி, சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் விரைந்து சென்று தவமணியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக முண்டியம் பாக்கம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பின்பு மணிகண்டனை போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவரிடம் தீவிர விசாணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தங்கள் பாணியில் விசாரிக்க தொடங்கினர். அப்போது மணிகண்டன், மனைவியை அடித்து கொலைசெய்ததாக கூறினார்.
தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. மணிகண்டனுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்பு அது கள்ளக்காதலாக மாறியது. இந்த விபரம் தவமணிக்கு தெரிவந்தது.
இதை தொடர்ந்து தவமணி தனது கணவரை கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறின்போது ஆத்திரம் அடைந்த மணிகண்டன் மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு பிணத்தை மின்விசிறியில் கட்டிதொங்கவிட்டது. தெரிவந்தது.
இதை தொடர்ந்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவியை கணவன் அடித்து கொலைசெய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.