செய்திகள்

இளம்பெண் மணியார்டர் அனுப்பிய விவகாரம்: லஞ்சம் கேட்ட அதிகாரிகளிடம் கலெக்டர் விசாரணை

தந்தை இறந்ததற்கான இறப்பு சான்றிதழ் கேட்ட இளம்பெண்ணிடம் லஞ்சம் கேட்ட அதிகாரிகள் குறித்து கலெக்டருக்கு மணியார்டர் அனுப்பியதால் இது குறித்து அதிகாரிகளிடம் கலெக்டர் விசாரணை நடத்தினார்.

மாலை மலர்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரை சேர்ந்தவர் தொப்பையன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 30.8.2016 அன்று மரணமடைந்து விட்டார். இதையடுத்து அவருடைய மனைவி குப்பம்மாள் தனது கணவர் இறந்ததற்கான ஈமச்சடங்கு நிதி உதவி கேட்டு தனது மகள் சுதாவுடன் திருநாவலூர் கிராம நிர்வாக அலுவலகம், உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்திலும் விண்ணப்பித்து இருந்தார்.

ஆனால் அவருக்கு ஈமச்சடங்கு நிதி வழங்க அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதைத்தொடர்ந்து சுதாவும், அவரது கணவர் திருப்பழனியும் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் தாசில்தாரிடம் சென்று பலமுறை கேட்டும் அவர்களுக்கு நிதிஉதவிவழங்கவில்லை.

ஆனால் அவர்கள் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டனர். தனது தந்தையின் ஈமச்சடங்கு நிதியை பெற அதிகாரிகளே லஞ்சம் கேட்கிறார்களே? என சுதா மனவேதனை அடைந்தார்.

இதைத்தொடர்ந்து அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 ஆயிரம் ரூபாயை மணியார்டர் மூலம் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியத்துக்கு அனுப்பினார். அதில், நான் அனுப்பியுள்ள இந்த 2 ஆயிரம் ரூபாயை என்னிடம் லஞ்சம் கேட்ட அதிகாரிகளுக்கு பிரித்து கொடுத்து விடுங்கள் என்று எழுதியிருந்தார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து கலெக்டர் சுப்பிரமணியன் அதிரடி நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார்.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்துக்கு தொப்பையனின் மனைவி குப்பம்மாள் மற்றும் சுதாவின் கணவர் திருபழனி ஆகியோரை வருமாறு உத்தரவிட்டார். அதன்படி நேற்று மாலை 3 மணிக்கு கலெக்டர் அலுவலகத்துக்கு குப்பம்மாள், திருபழனி ஆகியோர் வந்தனர். அவர்களிடம் கலெக்டர் சுப்பிரமணியன் மற்றும் சப்-கலெக்டர் ரஞ்சனி ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினார்.

அப்போது அவர்களிடம் லஞ்சம் கேட்ட அதிகாரிகள் யார்-யார்? அவர்கள் எவ்வளவு பணம் கேட்டனர்? என்பது குறித்து அவர்களிடம் கேட்டதாக தெரிகிறது.

அதன் பின்னர் உளுந்தூர்பேட்டை சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் உள்பட 8 பேரிடம் கலெக்டர் விசாரணை நடத்தினார். இந்த விசாரணை மாலை 6.15 மணி வரை நடந்தது.

விசாரணை முடிந்த பின்பு கலெக்டர் சுப்பிர மணியன் நிருபர்களிடம் கூறும்போது, இந்த சம்பவத்தில் லஞ்சம் கேட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.