செய்திகள்

‘கற்களை வீசி எங்களை தடுக்க முடியாது’: கார் தாக்கப்பட்டதை அடுத்து ராகுல்காந்தி டுவிட்

கற்களை வீசி எங்களை தடுக்க முடியாது என கார் தாக்கப்பட்டதை அடுத்து ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

குஜராத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற போது பனஸ்கந்தாவின் லால் சவுக் பகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் கார் மீது கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அவரது காரின் பின்புற கண்ணாடி உடைந்து நொறுங்கியது. மேலும் அவரது பாதுகாப்புக்கு சென்ற சில வாகனங்களின் கண்ணாடிகளும் உடைந்தன. இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார். எனினும் இந்த சம்பவத்தில் ராகுல் காந்தி காயம் இன்றி தப்பினார்.

இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னதாக ராகுல் காந்திக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்து கோ‌ஷங்களும் எழுப்பப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

குஜராத்தில் ராகுல் காந்தியின் கார் மீது கற்கள் வீசப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக பா.ஜனதா மீது காங்கிரஸ் குற்றம் சாட்டிஉள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா பேசுகையில், “பனாஸ்காந்தாவில் லால் சவுக் பகுதியில் ராகுல் காந்தியின் கார் மீது பாரதீய ஜனதாவின் குண்டர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். மிகவும் வெறுக்கத்தக்க மற்றும் அவமானகரமான செயல். திட்டமிடப்பட்ட தாக்குதலில் ராகுல் காந்தியின் கார் கண்ணாடி உடைந்து உள்ளது. பாதுகாப்பு வீரர் காயம் அடைந்து உள்ளார். உண்மையை ஒடுக்க முடியாது என பாரதீய ஜனதாவிற்கு தெரியும்,” என கூறி உள்ளார். கார் தாக்கப்பட்டதை அடுத்து பயணம் தொடரும் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், “நரேந்திர மோடி ஜி கோஷம், கருப்புக் கொடிகள் மற்றும் கற்களால் எங்களை பயமுறுத்த முடியாது... அனைத்து வகையிலும் மக்களுக்கக பணியாற்றுவோம்,” என கூறிஉள்ளார்.