செய்திகள்

தீபாவளி கொண்டாட்டம்: எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த யோகி ஆதித்யநாத்

தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்றதை விமர்சித்த எதிர்க்கட்சிகளுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத் பதிலடி கொடுத்துள்ளார்.

மாலை மலர்

அயோத்தி:

உத்தர பிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் நடந்த தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். மாநில கவர்னர் ராம் நாயக்கும் கலந்துகொண்டார். தீபாவளி கொண்டாடிய முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் செய்தன.

இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ள யோகி ஆதித்யநாத், தனது நம்பிக்கையை கேள்வி எழுப்பும் உரிமை யாருக்கும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.  

அயோத்தியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த யோகி ஆதித்யநாத் கூறியதாவது:-

இது எனது தனிப்பட்ட நம்பிக்கை சார்ந்த விஷயம். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் எப்படி தலையிட முடியும்? அயோத்தி வந்ததற்கு மற்றொரு காரணம் என்னவென்றால், தீபாவளியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் நகரமான இங்கு வருகை தருவர் என்பதால், இங்கு செய்யப்பட்டு இருந்த ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்ய வேண்டி இருந்தது.

மாநில முதல் மந்திரியாக, இது எனது கடமையாகும். மாநிலத்தின் ஒவ்வொரு இடத்திற்குமான வளர்ச்சியை உறுதி செய்வதில் நான் உறுதியுடன் உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அயோத்தியில் உள்ள அனுமன் கோவில், சுக்ரீவன் கோவில் மற்றும் ராமஜென்ம பூமியில் யோகி ஆதித்யநாத் இன்று வழிபாடு நடத்தினார். மேலும் தனது சொந்த தொகுதியான கோரக்பூரில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.