அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதைதொடர்ந்து, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகள் முக்கிய தலைவர்களை அழைத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்னால் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி குஜராத்துக்கு சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள வல்சாத் தொகுதிக்கு உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அங்கு அவர் பேசியதாவது:
தேர்தல் பிரச்சாரத்துக்காக ராகுல் காந்தி எங்கு சென்றாலும் அங்கு காங்கிரஸ் தோற்று விடும். உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் 14 ஆண்டுகளாக வெற்றி பெற்றாலும், அமேதியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைப்பதற்கு காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. அவர்கள் குஜராத்தில் மட்டும் என்ன செய்துவிட போகின்றனர்?
குஜராத்தை சேர்ந்த சர்தார் வல்லபாய் படேலுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என காங்கிரஸ் கடந்த 41 ஆண்டுகளாக கோரிக்கை எழுப்பவில்லை. ஆனால், வாஜ்பாய் தான் கோரிக்கை வைத்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.