சென்னை:
வங்கிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என்று வாட்ஸ்-அப்பில் தகவல் பரவி வருகிறது. அந்த தகவல் தவறானது என்று வங்கி அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
வருகிற 29-ந்தேதி வியாழக் கிழமை மகாவீர் ஜெயந்தி, 30-ந்தேதி புனித வெள்ளி, 31-ந்தேதி சனிக்கிழமை, 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை, 2-ந்தேதி (திங்கட்கிழமை) ஆண்டு கணக்கு முடிப்பு தினம் என தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை எனவும் அதற்கேற்றவாறு பண பரிவர்த்தனைகளை முன் கூட்டியே திட்டமிட்டு கொள்ளுமாறு தகவல் பரவியது.
இதுகுறித்து வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சி.எச். வெங்கடாசலம் கூறியதாவது:-
வருகிற 29 மற்றும் 30-ந் தேதிகளில் மகாவீர் ஜெயந்தி மற்றும் புனித வெள்ளியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமறை விடப்பட்டுள்ளது. 31-ந்தேதி (சனிக்கிழமை) 5-வது சனிக்கிழமையாகும். அன்றைய தினம் வழக்கம் போல் வங்கிகள் செயல்படும். வாடிக்கையாளர்கள் பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து வங்கி சேவைகளையும் மேற்கொள்ளலாம்.
ஏப்ரல் 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறையாகும். ஏப்ரல் 2-ந்தேதி வங்கிகளின் ஆண்டு கணக்கு முடிக்கும் தினம். அதனால் அன்றைய தினம் வங்கிகள் செயல்படும். ஆனால் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை ஏதும் மேற்கொள்ளப்படமாட்டாது.
வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை என்பது தவறான தகவலாகும். சனிக்கிழமை வங்கிகள் செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #Bank #tamilnews