செய்திகள்

மம்தா கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த முகுல் ராய்க்கு ‘Y+’ பாதுகாப்பு

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்த முகுல் ராய்க்கு ‘Y+’ பாதுகாப்பு அளிக்க உள்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

மேற்கு வங்காளம் மாநிலத்தை ஆட்சியை செய்யும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த முகுல் ராய், பா.ஜ.க. மேலிடத் தலைவர்களுடன் ரகசிய தொடர்பு வைத்திருப்பதாக கூறி கட்சியின் துணைத்தலைவர் பதவியில் இருந்தும், பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் முகுல் ராய் விடுவிக்கப்பட்டதாக மம்தா பானர்ஜி அறிவித்தார்.

இதனையடுத்து, கட்சியிலிருந்து விலகிய முகுல் ராய் தனது மேல்-சபை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். பா.ஜ.க.வில் அவர் ஐக்கியமாவார் என்று கூறப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மத்திய மந்திரி ரவி ஷங்கர் பிரசாத் முன்னிலையில் அவர் அதிகரப்பூர்வமாக பா.ஜ.க.வில் இணைந்தார்.

இந்நிலையில், முகுல் ராய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதால் ‘Y+’ பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேபோல், காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட தினேஷ்வர் சர்மாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.