செய்திகள்

ரூ.12,000 அதிரடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட்போன், ஆனால் ஒரு நிபந்தனை

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடல் ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.12,000 தள்ளுபடி செய்துள்ளது. புதிய எக்சேஞ்ச் தள்ளுபடி சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

புதுடெல்லி:

இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான ரெட்மி நோட் 4 ப்ளிப்கார்ட் தளத்தில் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் ரூ.12,000 வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ள ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனினை வாடிக்கையாளர்கள் ரூ.999 மட்டும் செலுத்தி வாங்கிட முடியும். 

எனி்னும் முழுமையான தள்ளுபடி இல்லாமல் பழைய ஸ்மார்ட்போன்களை வாடிக்கையாளர்கள் எக்சேஞ்ச் செய்யும் போது தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதிகபட்ச தள்ளுபடி ஐபோன் 7 மற்றும் ஐபோன் 6S மாடல்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஐபோன் 7 மாடலை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.12,000 மற்றும் ஐபோன் 6S எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.10,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

சியோமி சிறப்பு விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த சலுகை குறைந்த காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. வழக்கமாக சியோமி ரெட்மி நோட் 4 விலை ரூ.9,999 முதல் துவங்குகிறது. அதன்படி 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.9,999க்கும், 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.10,999 மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.12,999க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

சிறப்பம்சங்களை பொருத்த வரை சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் 1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட எல்சிடி டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இன்டெர்னல் மெமரியுடன் மெமரியை கூடுதலாக 128GB வரை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமராவும், 5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அழகிய புகைப்படங்களை எடுக்க கூடுதலாக கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள நோட் 4 ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் சார்ந்த MIUI 8 யூஸர் இன்டர்ஃபேஸ் கொண்டுள்ளது. 4ஜி வோல்ட்இ தொழில்நுட்பம் கொண்டுள்ள ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் 4100 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.