புதுடெல்லி:
சியோமி நிறுவனம் இன்று நடைபெற்ற விழாவில் தனது புதிய ரெட்மி ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் ஏற்கனவே நிலவி வந்த எதிர்பார்ப்பை சியோமி நிறைவேற்றியுள்ளது. முன்னதாக சியோமி ரெட்மி 4 சீனாவில் மட்டும் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட நிலையில் இதே மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மூன்று வித மாடல்களில் வெளியிடப்பட்டுள்ள ரெட்மி 4 பார்க்க ரெட்மி 4X போன்றே காட்சியளிக்கின்றது. 2ஜிபி ரேம், 16ஜிபி இன்டெர்னல் மெமரி, 3ஜிபி, 32 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 4ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரிக்களில் கிடைக்கின்றது. புதிய ரெட்மி 4 அமேசான் மற்றும் Mi.com தளத்திங்களில் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட் பிளாக் மற்றும் எலிகண்ட் கோல்டு நிறங்களில் கிடைக்கும் ரெட்மி 4 விற்பனை மே 23-ந்தேதி துவங்கும் என்றும், இதன் முன்பதிவு இன்று துவங்குகின்றது. முன்பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் ரூ.1,000 செலுத்த வேண்டும் என்றும் புதிய சாதனம் எம்.ஐ. ஹோம் ஸ்டோரில் இருந்து விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்த வரை சியோமி ரெட்மி 4 ஸ்மார்ட்போனில் MIUI 8 சார்ந்த ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மல்லோ இயங்குதளம், முழுமையான மெட்டல் வடிவமைப்பு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5.0 இன்ச் 720x1280 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர், எல்இடி பிளாஷ், 5 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் f/2.2 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இன்ஃப்ராரெட் சென்சார், 4100 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இத்துடன் ஒவ்வொரு செயலியையும் கைரேகை மற்றும் பாஸ்வேர்டு மூலம் பாதுகாக்கும் வசதியும், டூயல் ஆப்ஸ், ஆண்ட்ராய்டு நௌக்கட் சிறப்பு பீட்டா பதிப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
விலையை பொருத்த வரை ரெட்மி 4- 2ஜிபி ரேம், 16ஜிபி இன்டெர்னல் மெமரி மாடல் ரூ.6,999, 3ஜிபி, 32 ஜிபி இன்டெர்னல் மெமரி மாடல் ரூ.8,999 மற்றும் 4ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மாடல் ரூ.10,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.