நாகர்கோவில்:
கன்னியாகுமரி அருகே உள்ள வடக்கு குண்டல் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 32). ராஜேசுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜேசுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.
இதில் ராஜேசின் மனைவி, கணவரை பிரிந்து கீழ்குளத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் ராஜேஷ் குழந்தைகளை பார்க்க கீழ்குளத்திற்கு சென்றார். அங்கு அவர் மனைவி வீட்டுக்கு சென்றபோது, வாலிபர் ஒருவர் ராஜேசை வழிமறித்து சரமாரியாக தாக்கினார். இதில் ராஜேஷ் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் பற்றி ராஜேஷ் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். அதில் கீழ்குளத்தில் தங்கியிருந்த குழந்தைகளை பார்க்க சென்றேன். அப்போது என்னை மனைவியின் கள்ளக்காதலன் வழிமறித்து தாக்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சனல்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இந்திரமணி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.