செய்திகள்

பெருந்துறை அருகே கடிதம் எழுதிவிட்டு மாயமான பெண்: கணவர் போலீசில் புகார்

உடல் நலம் சரியில்லாததால் என்னை யாரும் தேட வேண்டாம் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் மாயமானார். இது குறித்து கணவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

ஈரோடு:

பெருந்துறை அடுத்த பிச்சாண்டாம் பாளையம், வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் கண்ணுசாமி (வயது 55). பி.எஸ்.என். எல். அலுவலகத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி ஜெகதீஸ்வரி (40). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த  2-ந் தேதி ஜெகதீஸ்வரி தனது கணவர் கண்ணுசாமிடம் கோவில்பட்டியில் உள்ள தாய்மாமன் மகன் வீட்டில் நடக்கும் விஷேசத்துக்கு சென்று வருகிறேன் என்று கூறி ரூ.600 வாங்கி கொண்டு  சென்றார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் ஜெகதீஸ்வரி வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த கண்ணுசாமி மனைவியை உறவினர் வீட்டுக்கு சென்று தேடினார். ஆனால் உறவினர்கள் எங்கள் வீட்டுக்கு ஜெகதீஸ்வரி வரவில்லை என்று கூறி விட்டனர்.

மேலும் ஜெகதீஸ்வரியின் செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச்- ஆப் செய்யப்பட்டிருந்தது.  இந்த நிலையில் ஜெகதீஸ்வரி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில் எனது உடல்நலம் சரியில்லை. அதனால் நான் யார் கண்ணும் படாத இடத்துக்கு செல்கிறேன். என்னை யாரும் தேட வேண்டாம் என்று எழுதி இருந்தது.

இதையடுத்து கண்ணுசாமி பெருந்துறை போலீசில் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து  தருமாறு புகார் செய்தார். அதன் பேரில் பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் எட்வர்டு வழக்குப்பதிவு  செய்து மாயமான ஜெகதீஸ்வரியை தேடிவருகிறார்.