புதுடெல்லி:
இந்திய மல்யுத்த அணியின் முன்னணி வீரர் சதீஷ் குமார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் மத்திய தொழிலக பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். 2006ம் ஆண்டு காமன்வெல்த் போட்டி, உலக போலீஸ் விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் தங்கம் வென்றுள்ளார்.
இவர் 2002ம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற 14-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். இதற்கான மருத்துவ பரிசோதனை மற்றும் ஊக்க மருந்து பரிசோதனையும் செய்யப்பட்டு உரிய அனுமதி வழங்கப்பட்டது.
இதனால் இந்திய அணி வீரர்களுடன் தென்கொரியாவுக்கு புறப்படுவதற்கு தயாரானார். ஆனால், விமானத்தில் ஏறும்போது அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக கூறி கீழே இறக்கிவிட்டுள்ளனர். மற்ற வீரர்கள் புறப்பட்டுச் சென்றனர். சதீஷ் குமாருக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதனால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது பெயரை கொண்ட மேற்கு வங்க வீரர் தான் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த வீரருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
அதேசமயம் தவறான குற்றச்சாட்டு கூறி தனது விளையாட்டு வாழ்க்கைக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி சதீஷ் குமார் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், பாதிக்கப்பட்ட மல்யுத்தவீரர் சதீஷ் குமாருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தவறு செய்திருப்பதாக கூறிய நீதிபதி, இதில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் மத்திய அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.