தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் யோலுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2024 அக்டோபர் மாதத்தில் வட கொரியாவின் தலைநகரான பியாங்யாங்கிற்குள் ரகசியமாக ராணுவ டிரோன்களை அனுப்பி துண்டுப் பிரசுரங்களை வீச யூன் சுக் யோல் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங் ஹியூன் ஆகியோர் உத்தரவிட்டனர்.
வட கொரியாவைத் தூண்டிவிட்டு, அவர்கள் மூலம் தென் கொரியா மீது ஒரு தாக்குதலை நடத்த வைப்பதே இவர்களின் திட்டமாக இருந்தது.
இதன் மூலம் நாட்டில் ஒரு அவசர நிலையை உருவாக்கி, நாடாளுமன்ற முடக்கத்திற்கும், சர்வாதிகார ஆட்சி முறைக்கும் வழிவகுக்கும் ராணுவச் சட்டத்தை அமல்படுத்தவே இந்த டிரோன் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
ஏற்கனவே, 2024 டிசம்பரில் நாட்டில் 6 மணி நேரம் தன்னிச்சையாக ராணுவச் சட்டத்தை அமல்படுத்தி, நாடாளுமன்றத்தை முடக்க முயன்ற தேசி துரோக வழக்கில் யூன் சுக் யோலுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக, தற்போது இந்த டிரோன் வழக்கிலும் அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங் ஹியூனுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.