கடந்த 15ம் தேதி ஐந்து நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சுவீடன், நார்வே மற்றும் இத்தாலி உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அந்நாட்டுப் அரசப் பிரதிநிதிகளுக்கு இந்தியாவின் தனித்துவமான கைவினைப் பொருட்களை பரிசாக வழங்கினார்.
நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரேவை சந்தித்த மோடி, உலர்ந்த ஆர்க்கிட் மலர் ஓவியம் மற்றும் ஆர்க்கிட் காகித எடைக்கற்கள் ஆகியவற்றை பரிசாக அளித்தார்.
சிக்கிமின் பனிமூட்டம் சூழ்ந்த பள்ளத்தாக்குகளில் உலர்ந்த ஆர்க்கிட் மற்றும் ஃபெர்ன் செடிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த கலைப் படைப்புகள், கிழக்கு இமயமலையின் பல்லுயிர் பெருக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன.
நார்வே நாட்டின் ராணி சோன் ஜாவுக்கு பனை ஓலை பட்டாசித்திரத்தை பிரதமர் மோடி பரிசளித்தார். பட்டாசத்திரம் என்று அழைக்கப்படும் பனைஓலை, ஒடிசாவின் மிகவும் பழமையான மற்றும் நுணுக்கமான கலை வடிவங்களில் ஒன்றாக உள்ளது.
நார்வே நாட்டின் பட்டத்து இளவரசர் ஹாக்கனுக்கு சூரியன் மற்றும் சந்திரன் உருவங்கள் கொண்ட கலம்காரி ஓவியத்தை பிரதமர் மோடி பரிசளித்தார். ஆந்திரப் பிரதேசத்தை பூர்வீகமாக கொண்டு இந்த கலம்காரி கலை வடிவம் அறியப்படுகிறது.
மூங்கில் பேனாவை கொண்டு கையால் வரைவது ஸ்ரீகாளஹஸ்தி கலை வடிவம் என்றும், கையால் செதுக்கப்பட்ட மர அச்சுப்பதிப்பு மச்சிலிப்பட்டணம் கலை வடிவம் என்றும் இரண்டு வகைகளாக அறியப்படுகிறது.
நெதர்லாந்து மன்னர் வில்லெம் அலெக்ஸாண்டரை சந்தித்த மோடி, நீல மட்பாண்டம் ஒன்றை பரிசளித்தார்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த நீல மட்பாண்டம், புவிசார் குறியீடு பெற்ற கலை வடிவமாக பார்க்கப்படுகிறது. இது கோபால்ட் நீலம், வெள்ளை மற்றும் மஞ்சள் நிற வடிவமைப்புகளில், கண்ணாடி கலவை மூலம் உருவாக்கப்படுகிறது.
நெதர்லாந்து நாட்டின் ராணி மாக்சிமாக்கு மீனாகரி மற்றும் குந்தன் காதணிகளை மோடி பரிசளித்தார். இது ராஜஸ்தானின் அரச பட்டறைகளில் இருக்கும் கைவினைத்திறனின் மரபுகளை பறைசாற்றுகிறது.
நெதர்லாந்து பிரதமர் ராப் கெட்டனுக்கு மீன் உருவம் பொறிக்கப்பட்ட மதுபானி ஓவியம் ஒன்றை மோடி பரிசளித்தார்.
மதுபானி ஓவியம் என்பது நேபாளத்தின் மதிலா பிராந்தியத்தை சேர்ந்த புவிசார் குறியிடப்பட்ட நாட்டுப்புறக் கலை மரபாகும். இது அதன் சிக்கலான வடிவியல் கோலங்களுக்கும் துடிப்பான வண்ணங்களுக்கும் பெயர் பெற்றதாக அறியப்படுகிறது.
சுற்றுப் பயணத்தின் இறுதியாக இத்தாலிக்கு வந்த மோடி, அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு மூகா பட்டு சால்வை மற்றும் ஷிருய் லில்லி பட்டு சால்வையை பரிசாக அளித்தார்.
அஸ்ஸாமின் 'தங்கப் பட்டு' என்று அழைக்கப்படும் மூகா பட்டு, பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கிலிருந்து வரும் ஒரு அரிய கைத்தறி நெசவுத் துணியாகும். ஷிருய் லில்லி பட்டு சால்வையானது, மணிப்பூரின் ஷிருய் காஷோங் சிகரத்தில் காணப்படும் அரிய ஷிருய் லில்லி மலரிலிருந்து கிடைக்கப்பெறுகிறது.