உலகம்

Tredmill-இல் ஓடிக் கொண்டிருந்த இளம்பெண் உடற்பயிற்சி கூட ஜன்னல் வழியே கீழே விழுந்து பலி - வீடியோ

30 நிமிடங்கள் டிரெட்மில்லில் ஓடிய பிறகு, அவர் தனது வேகத்தைக் குறைத்தார்.

இந்தோனேசியாவில் உடற்பயிற்சிக் கூடத்தின் ​​மூன்றாவது மாடி ஜன்னலிலிருந்து பெண் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் உள்ள பொன்டியானாக் நகரில் பாத்தியா (22) தனது தோழி மற்றும் தம்பியோடு உள்ளூர் 'கே-ஜிம்' என்ற உடற்பயிற்சிக் கூடத்திற்கு சென்றார்.

அவர் மூன்றாவது மாடியில் உள்ள டிரெட்மில் பிரிவில் தனது உடற்பயிற்சியை தொடங்கினார்.

விபரீதம்

சுமார் 30 நிமிடங்கள் டிரெட்மில்லில் ஓடிய பிறகு, அவர் தனது வேகத்தைக் குறைத்தார். அந்த நேரத்தில், அவர் திடீரென நிலை தடுமாறிப் பின்னால் விழுந்தார்.

டிரெட்மில்லின் பின்புறத்திற்கும் திறந்திருந்த ஜன்னலுக்கும் இடையில் வெறும் 2 அடி இடைவெளி மட்டுமே இருந்தது.

மேலும், அந்த ஜன்னல் தரையிலிருந்து 30 சென்டிமீட்டர் உயரத்திலும், சுமார் 90 சென்டிமீட்டர் அகலத்திலும் மட்டுமே இருந்தது.

அந்த பெண் நிலை தடுமாறி, மூன்றாவது மாடியிலிருந்து நேராக ஜன்னல் வழியாகக் கீழே விழுந்தார்.

உயிரிழப்பு

அவர் பலத்த காயமடைந்த நிலையில், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

தலையில் கடுமையான காயங்கள் மற்றும் அதிக இரத்தப்போக்கு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

அவரது தலை, முகம் மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததை பிரேத பரிசோதனை அறிக்கையும் உறுதி செய்தது.

விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

உடற்பயிற்சி கூடம் மூடல்

அந்த உடற்பயிற்சி கூடத்தில் பின்பற்றப்பட்ட மோசமான பாதுகாப்பு நடைமுறைகளே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

உடற்பயிற்சி கூடத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரணையை தொடங்கிய அதிகாரிகள், அந்த உடற்பயிற்சிக் கூடத்தை தற்காலிகமாக மூடினர்.

பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத அலட்சியத்திற்காக உடற்பயிற்சிக் கூட உரிமையாளர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

SCROLL FOR NEXT