உலகம்

அமெரிக்க பயணத்தை நிறைவு செய்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்

இம்முறை, அந்த உறவில் புதிய வலுவை சேர்க்க நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடனான தனது பேச்சுவார்த்தைகள் சீனா-அமெரிக்க உறவுக்கு "புதிய வலு" சேர்த்துள்ளதாக குறிப்பிட்ட சீன அதிபர் ஜி ஜின்பிங், இவ்விரு நாடுகளுக்கு இடையிலான உறவில் "மிகவும் சிறப்பான எதிர்காலம்" அமையும் என்று நம்பிக்கை தெரிவித்து, தனது மூன்று நாள் அமெரிக்க பயணத்தை நிறைவு செய்தார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) காலை வெள்ளை மாளிகையில் டிரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் தேநீர் அருந்தியவாறு தங்கள் பேச்சுவார்த்தையை தொடர்ந்தனர்.

அப்போது, ​​இந்த பயணத்தின் மூலம் சீனா மற்றும் அமெரிக்கா இடையே "மிகப்பெரிய முன்னேற்றங்கள்" எட்டப்பட்டுள்ளதாகவும், இது அமெரிக்க விவசாயிகளை "மிகவும் மகிழ்ச்சியடைய செய்யும்" என்றும் அமெரிக்க அதிபர் கூறினார்.

சீனாவுக்கு வருகை தருமாறு அழைப்பு:

இந்த ஆண்டில் இன்னும் இரண்டு சந்தர்ப்பங்களில் - சீனாவில் நடைபெறவுள்ள APEC உச்சிமாநாடு மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜி20 உச்சிமாநாடு ஆகியவற்றில் - டிரம்ப்-ஐ சந்திக்க ஆவலாக இருப்பதாக ஜி ஜின்பிங் தெரிவித்தார்.

"அதிபர் அவர்களையும், ஃபர்ஸ்ட் லேடியையும் (First Lady) சீனாவுக்கு வருகை தருமாறு நான் வரவேற்கிறேன்," என்று வெள்ளை மாளிகையின் 'ரெட் ரூம்' அறையில் நடைபெற்ற சந்திப்பின்போது ஜி ஜின்பிங் கூறினார்.

"சீனா-அமெரிக்க உறவு எனும் மாபெரும் கப்பலுக்கான பாதையை வகுக்கும் இருவரை போல அதிபரும் நானும் செயல்படுகிறோம். கடந்த மே மாதம் அதிபர் சீனாவுக்கு வருகை தந்தபோது, ​​மூலோபாய ஸ்திரத்தன்மை கொண்ட ஆக்கபூர்வமான சீனா-அமெரிக்க உறவை உருவாக்குவதற்கான தொலைநோக்கு பார்வையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்," என்று ஜி ஜின்பிங் கூறினார்.

எதிர்காலம் மேலும் சிறப்பாக அமையும்:

"இம்முறை, அந்த உறவில் புதிய வலுவை சேர்க்க நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். பரஸ்பர மரியாதை, இருதரப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மூலோபாய ஸ்திரத்தன்மை கொண்ட ஆக்கபூர்வமான உறவாக இது அமையும்," என்று ஊடகங்களிடம் பேசிய சீன தலைவர் சுருக்கமாகக் குறிப்பிட்டார்.

"எனவே, இதன் மூலம் இவ்விரு நாடுகளுக்கு இடையிலான உறவின் எதிர்காலம் மேலும் சிறப்பாக அமையும் என்பதை அறியலாம்," என்று ஜி ஜின்பிங் கூறினார்.

SCROLL FOR NEXT