சீன அதிபர் ஜி ஜின்பிங் 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று அமெரிக்காவுக்கு சென்றார். அவரை அமெரிக்க அதிபர் டிரம்ப் விமானதளத்துக்கே நேரில் சென்று வரவேற்றார்.
பின்னர் வெள்ளை மாளிகைக்கு சென்ற ஜின்பிங்குக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து டிரம்பும்- ஜின்பிங்கும் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் வர்த்தகம், செயற்கை நுண்ணறிவு, தைவான் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். இதில் ஆக்கபூர்வமான அமெரிக்கா-சீனா உறவை உருவாக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
மேலும், இருநாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தம் வருகிற நவம்பர் மாதம் முடிவடைய இருந்த நிலையில் அதை 2 மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.
தைவான் சுதந்திரம் கோருவதை எதிர்ப்பது என்ற சரியான நிலைப்பாட்டை அமெரிக்கா கடைப்பிடிக்கும் என்று நம்புவதாக சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு அமெரிக்க அரசு சார்பில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு வெள்ளை மாளிகையில் இரவு விருந்து அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்க வந்த ஜின்பிங்கை டிரம்ப் வரவேற்று அழைத்து சென்றார்.
விருந்து நிகழ்ச்சியில் தொழில் அதிபர்கள் எலான் மஸ்க், மார்க் ஜுக்கர்பெர்க், ஆல்ட்மேன், ஜென்சன் ஹுவாங், ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஜின் பிங்குக்கு அமெரிக்காவின் தேசியச் சின்னமான பால்ட் ஈகிள் கழுகு சிலையை டிரம்ப் பரிசாக வழங்கினார்.
விருந்தின்போது சீன அதிபர் ஜின்பிங் பேசியதாவது:-
எனக்கும், என் மனைவிக்கும் அளித்த சிறப்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இருதரப்பு பேச்சுவார்த்தையில் அதிபர் டிரம்பும் நானும் நேர்மையான மற்றும் ஆழமான கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டு, பல விஷயங்களில் ஒரு பொதுவான புரிதலை எட்டினோம்.
இது, ஆக்கப்பூர்வமான சீனா- அமெரிக்க உறவுக்குப் புதிய வலு சேர்த்துள்ளதுடன் புதிய மூலோபாய வழிகாட்டுதலையும் வழங்கியுள்ளது.
தடையின்றி ஓடும் நதியைப் போலவே, வரலாறும் ஒருபோதும் தேங்கி நிற்பதில்லை. இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான நட்பு, பெரும் நம்பிக்கைக்குரிய ஒரு உன்னதமான முயற்சியாகும்.
நாம் கைகோர்த்து, தோளோடு தோள் சேர்ந்து முன்னேறுவோம். சீன- அமெரிக்க நட்புறவு எனும் அழகான மலர்களை நாம் இணைந்து வளர்ப்போம். நமது நட்புறவில் ஒரு புதிய அத்தியாயத்தை நாம் இணைந்து படைப்போம்.
அமெரிக்கா- சீனாவின் இலக்குகள் “ஒன்றையொன்று வலுப்படுத்தக் கூடியவை. இரு தரப்பினரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜின் பிங் தனது பேச்சின்போது,"2-ம் உலகப்போரின் போது பாசிச ஆக்கிரமிப்புக்கு எதிராக சீனர்களும் அமெரிக்கர்களும் தோளோடு தோள் நின்று போராடியதை நினைவு கூர்ந்தார்.
வரலாற்றின் அந்தப் பகுதியை சீன மக்களோ அல்லது அமெரிக்க மக்களோ ஒருபோதும் மறக்கவில்லை" என்றார்.
மேலும், வரும் 5 ஆண்டுகளில் கல்வி மற்றும் பரிமாற்ற நிகழ்ச்சிகளுக்காக சீனாவுக்கு வரும் 1 லட்சம் அமெரிக்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது:-
நாங்கள் வெவ்வேறு அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் என்பதை அறிவோம். இருப்பினும், எங்கள் மக்களுக்கிடையிலான பிணைப்பு நீடிக்கிறது.
நாங்கள் முன்னெப்போதையும்விட மிகச் சிறந்த இணக்கத்துடன் இருக்கிறோம். எதிர்கால சந்ததியினருக்கான செழிப்பையும் பாதுகாப்பையும் மேம்படுத்தும் வகையிலான ஒரு உறவை நாங்கள் இணைந்து தொடர்ந்து கட்டியெழுப்புவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.