உலகம்

அமெரிக்காவில் நடந்த உலகின் மிக அசிங்கமான நாய் போட்டி

உலகின் மிக அசிங்கமான நாய் பட்டம்: கலிபோர்னியாவில் நடந்த போட்டியில் ஜின்னி லூ பக் நாய் சாம்பியன்

2026 ஆம் ஆண்டின் உலகின் மிக அசிங்கமான நாய் போட்டியில், ஜின்னி லூ என்ற 6 வயது பக் நாய் வெற்றியாளராக முடிசூட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தனித்துவமான தோற்றமுடைய நாய்களை ஒன்றிணைத்து உலகின் அசிங்கமான நாய் போட்டி நடத்தப்பட்டது.

சோனோமா-மரின் விவசாய சங்கத்தால் நடத்தப்பட்ட நாய் போட்டி, கலிபோர்னியாவின் சாண்டா ரோசாவில் உள்ள சோனோமா கவுண்டி கண்காட்சி மைதானத்தில் ஆகஸ்ட் 14 அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில், விசித்திரமான ஆனால் அழகான தோற்றமுடைய நாய்கள், முதல் பரிசை பெற்றுக் கொள்வதற்காக போட்டியிட்டன. சர்வதேச அளவில் அறியப்பட்ட இந்த போட்டியில் வெற்றி பெற்ற ஜின்னி லூவின் உரிமையாளர் மிஷேல் கிரேடிக்கு, MUG ரூட் பீர் நிறுவனத்திடமிருந்து சுமார் 4,77,252 ரூபாயும் ($5,000) பரிசாக வழங்கப்பட்டது.

MUG ரூட் பீர் நிறுவனம், இரண்டாம் இடம் பிடித்த சிஹுவாஹுவா/போமரேனியன் கலப்பின நாயான பிங்கிக்கு சுமார் 2,86,770 ரூபாயும், மூன்றாம் இடம் பிடித்த சிஹுவாஹுவா கலப்பின நாயான ஓட்டோவிற்கு சுமார் 1,91,180 ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

முதல் பரிசை பெற்ற ஜின்னி லூ நாய், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பக் ரெஸ்க்யூ மூலம் தத்தெடுக்கப்பட்டதாகவும், அன்றிலிருந்து அது தொடர்ச்சியான குறும்பு மற்றும் மகிழ்ச்சியின் ஆதாரமாக இருந்து வருவதாகவும் அதன் பாதுகாவலர் தெரிவித்தார்.

இதுகுறித்து நாயின் உரிமையாளர் கூறுகையில், உலகின் மிக அசிங்கமான நாய் என்ற பட்டத்தை வெல்வதற்காக எனது ஜின்னி லூ நாய் தொடர்ந்து நான்காவது முயற்சியை மேற்கொண்டது.

அமெரிக்க்காவில் நடத்தப்பட்ட இந்த, ‘உலகின் மிக அசிங்கமான நாய் போட்டி’ என்பது ஒருபோதும் நாய்களை அவமானப்படுத்துவதற்காக நடத்தப்படுவதில்லை.

மாறாக, போட்டி அமைப்பாளர்கள் இந்த நிகழ்வை, ஒவ்வொரு நாயின் தனித்தன்மையையும் உள்ளார்ந்த அழகையும் எடுத்துக்காட்டவும், அன்புக்காக காத்திருக்கும் பாசமுள்ள நாய்களை வெளி உலகிற்கு காண்பித்து, செல்லப்பிராணிகளை தத்தெடுக்கும் ஊக்குவிப்பாக பார்கின்றனர்.

50 ஆண்டுகளாக, இந்த நிகழ்வு ஒவ்வொரு நாயின் தனித்துவத்தையும் கொண்டாடுவதோடு, கருணை, மீட்பு மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய செய்திகளையும் பகிர்ந்து வருகிறது.