உலகம் முழுவதும் இன்று உலக ஆசிரியர் தினம் மிகவும் எழுச்சியோடும் நெகிழ்ச்சியோடும் கொண்டாடப்பட்டு வருகிறது.
எதிர்கால சமுதாயத்தை வடிவமைக்கும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் அவர்களது பங்களிப்பைப் போற்றும் வகையில் இந்தத் தினம் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தியாவில் செப்டம்பர் 5-ஆம் தேதி தேசிய ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் வேளையில், சர்வதேச அளவில் ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ மற்றும் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு ஆகியவை இணைந்து அக்டோபர் 5-ஐ உலக ஆசிரியர் தினமாக அறிவித்துக் கொண்டாடி வருகின்றன.
1966-ஆம் ஆண்டு ஆசிரியர்களின் உரிமைகள், பொறுப்புகள் மற்றும் அவர்களின் பணிச்சூழல் குறித்த சர்வதேச வரலாற்றுப் பரிந்துரை யுனெஸ்கோ அமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அந்தப் பெருமைமிக்க வரலாற்று நிகழ்வு ஏற்படுத்தப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இந்த ஆண்டு உலக ஆசிரியர் தினம் உலகளவில் மிகப்பெரிய முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட விழிப்புணர்வு கருப்பொருளை மையமாகக் கொண்டு இத்தினம் கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மையக்கருத்து "ஆசிரியர்களுடன் துணை நிற்றல்: இத்துறையை பாதுகாத்தல், நமது எதிர்காலத்தை வடிவமைப்பதில் 60 ஆண்டுகள்" என்ற மையக்கருத்தை கொண்டுள்ளது.
உலகளவில் கல்வித்துறையில் தொழில்நுட்ப வளர்ச்சி, மாறிவரும் சூழல் மற்றும் உலகளாவிய ஆசிரியர் பற்றாக்குறை போன்ற சவால்களுக்கு மத்தியில், ஆசிரியர்களின் குரலுக்கு மதிப்பளித்து அவர்களைப் பாதுகாப்பது எவ்வளவு அவசியம் என்பதை இந்த ஆண்டு கருப்பொருள் வலியுறுத்துகிறது.
ஆசிரியர்களின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் 1994-ஆம் ஆண்டு முதல் இந்தத் தினம் அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
வகுப்பறைகளில் வெறும் பாடங்களை மட்டும் கற்பிக்காமல், மாணவர்களுக்கு ஒழுக்கம், பண்பாடு மற்றும் வாழ்வியல் நெறிகளை ஊட்டி, அறியாமை இருளை அகற்றி அறிவு ஒளியை ஏற்றி வைக்கும் உன்னதப் பணியை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.
உலக ஆசிரியர் தினமான இன்று, தங்களின் வாழ்வை மாணவர்களுக்காக அர்ப்பணித்துச் சமூக மாற்றத்திற்கு வித்திடும் அனைத்து நல் ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறோம்!