உலகம்

லாட்டரியில் 20 ஆண்டுகளாக ஒரே நம்பர்களை வாங்கிய பெண் : திடீரென விழுந்த ரூ1. 30 கோடி!

ஒரே குலுக்கலுக்காக 3 வெவ்வேறு டிக்கெட்டுகள வாங்கிய நிலையில் அடித்த அதிர்ஷ்டம்!

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தான் வாங்கி வந்த ஒரே நம்பர்களை கொண்ட மூன்று டிக்கெட்டுகளுக்கு மொத்தமாக இந்திய மதிப்பில் சுமார் ரூ1.30 கோடிக்கும் மேல் பரிசு விழுந்துள்ளது.

20 ஆண்டுக்கால நம்பிக்கை

மேரிலாண்டின் ஒயிட் பிளைன்ஸ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 20 வருடங்களாக 'போனஸ் மேட்ச் 5' என்ற லாட்டரி விளையாட்டில் தனக்கென சில குறிப்பிட்ட எண்களைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து அதே எண்களையே பயன்படுத்தி வந்துள்ளார்.

சமீபத்தில் அங்குள்ள உள்ளூர் மதுபானக் கடையில் அதே எண்களைப் பயன்படுத்தி, ஒரே குலுக்கலுக்காக மூன்று வெவ்வேறு டிக்கெட்டுகளை அவர் வாங்கியுள்ளார்.

நம்ப முடியாத அதிர்ஷ்டம்

குலுக்கல் முடிவுகள் வெளியானபோது, அந்தப் பெண் தேர்ந்தெடுத்த எண்கள் அப்படியே பொருந்திப் பரிசு விழுந்திருந்தது. ஆனால், தனுக்குத்தான் பரிசு விழுந்துள்ளதா என்பதை அவரால் உடனடியாக நம்ப முடியவில்லை.

இதுகுறித்து அவர் கூறுகையில், "எனக்கு லாட்டரி எண்களைப் பார்த்ததும் முதலில் அதிர்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

உடனே லாட்டரி விளையாடும் பழக்கமுள்ள என் சகோதரியை அழைத்து, எண்களைச் சரியாகப் படிக்குமாறு கூறினேன்" என்றார்.

அவரது சகோதரி சரிபார்த்துவிட்டு, அவர் வாங்கிய மூன்று டிக்கெட்டுகளுக்குமே தலா ரூ. 45 லட்சத்திற்கும் மேல் மொத்தம் ரூ.1.30 கோடி ஜாக்பாட் அடித்துள்ளதை உறுதிப்படுத்தினார்.

SCROLL FOR NEXT