உலகம்

நேட்டோவில் இருந்து விலகணும்.. ரஷியா போட்ட கண்டிஷன்? - பொங்கிய பின்லாந்து

அந்நாடு 2023 ஏப்ரலில் நேட்டோ உறுப்பினரானது.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக, நேட்டோ கூட்டமைப்பில் இருந்து பின்லாந்தை விலக்குவதற்கான ரஷியாவின் முன்மொழிவை பின்லாந்து நிராகரித்துள்ளது.

அபுதாபியில் நடந்த உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைகளின் போது ரஷியப் பிரதிநிதிகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அத்தகைய முன்மொழிவை முன்வைத்ததாக ஜெர்மன் ஊடகமான பில்ட் செய்தி வெளியிட்டது.

கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவின் ராணுவ இருப்புக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் ரஷியா கோரியதாக அந்த அறிக்கை தெரிவித்தது.

பின்லாந்து எதிர்ப்பு

இதற்கிடையில், நேட்டோ உறுப்புரிமையிலிருந்து விலக வேண்டும் என்ற அறிக்கையின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று பின்லாந்து பாதுகாப்பு அமைச்சர் ஆண்டி ஹக்கனென் கூறினார்.

மேலும், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் நாட்டின் நேட்டோ உறுப்புரிமை ஒரு பிரச்சினை அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

"இந்த விஷயங்கள் எந்தச் சூழ்நிலையிலும் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டவை அல்ல. இதுபோன்ற ஒரு முன்மொழிவை முன்வைப்பதே முற்றிலும் அநியாயமானது" என்று ஹகானென் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், ரஷியா இந்த விவாதத்தை உக்ரைன் பிரச்சினைக்கு அப்பால் விரிவுபடுத்தவும், ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்புகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கவும் முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ரஷியா மறுப்பு

இருப்பினும், அத்தகைய கோரிக்கையை விடுத்ததாக வெளியான செய்தியை ரஷியா மறுத்தது.

பின்லாந்து நேட்டோவிலிருந்து விலக வேண்டும் என்று ரஷியா கோரவில்லை என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார். "அப்படி ஒரு விஷயம் ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை" என்று அவர் ஊடகங்களிடம் கூறினார்.

நேட்டோவில் பின்லாந்து

உக்ரைன் ஐரோப்பாவின் நேட்டோ கூட்டமைப்பில் இணைய முயன்றதற்கு எதிராகத்தான் ரஷியா உக்ரைன் மீது போர் தொடுத்தது. உக்ரைன் போர் தொடங்கிய அதே சமயம், 2022 பிப்ரவரியில் பின்லாந்து நேட்டோ உறுப்புரிமைக்கு விண்ணப்பித்தது. அதனைத் தொடர்ந்து, அந்நாடு 2023 ஏப்ரலில் நேட்டோ உறுப்பினரானது.

கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவின் விரிவாக்கம் மற்றும் ராணுவ இருப்புக்கு கட்டுப்பாடுகளை விதிக்குமாறு ரஷியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது ரஷியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என அந்நாடு வாதிடுகிறது. அண்டை நாடுகள் நேட்டோவில் இணைந்தால் அது அந்நிய சக்திகள் ரஷிய எல்லைக்குள் நுழைய எளிதில் வழிவகுக்கும் என்ற அச்சம் புதின் அரசிடம் நிலவுகிறது.

திசை திருப்பல்

இதனிடையே பின்லாந்தை இதில் இழுப்பது உக்ரைனில் ரஷியாவின் ராணுவ நடவடிக்கைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பிவிடும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காயா கல்லாஸ் எச்சரித்தார்.

ஐரோப்பாவின் தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுஆய்வு செய்யத் தேவையில்லை என்று ஜெர்மன் அதிபர் பிரெட்ரிக் மெர்ஸும் கூறினார்.

SCROLL FOR NEXT