உலகம்

2100-க்குள் அழியும் மனிதகுலம்?.. 3 முக்கிய ஆபத்துகளை சுட்டிக்காட்டி லான்செட் ஆய்வறிக்கை எச்சரிக்கை

35 நிபுணர்கள் கொண்ட குழுவால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, உலக சுகாதார உச்சிமாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

2100ஆம் ஆண்டிற்குள் மனிதகுலம் அழியக்கூடும் என பிரபல மருத்துவ இதழான 'தி லான்செட்' உடைய புதிய அறிக்கை எச்சரித்துள்ளது.

21 ஆம் நூற்றாண்டின் உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல்கள் குறித்த லான்செட் ஆணையத்தால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை

அடுத்த 75 ஆண்டுகளில் மனித ஆரோக்கியத்திற்கும் உயிர்வாழ்விற்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய 17 முக்கிய அச்சுறுத்தல்களை அறிக்கை அடையாளம் கண்டுள்ளது.

அதில் அணுஆயுத போர்கள், செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாடு, தீங்கு விளைவிக்கக்கூடிய பயோ வெப்பன்ஸ் எனப்படும் உயிரி ஆயுதங்கள் ஆகியவற்றால் அடுத்த 75 ஆண்டுகளில் அதாவது 2100 க்குள் மனிதகுலம் அழிவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.

தீங்கு

குறிப்பாக செயற்கை நுண்ணறிவைத் தவறாகப் பயன்படுத்தி, தீங்கு விளைவிக்கக்கூடிய உயிரியல் ஆயுதங்கள் உருவாக்கப்படலாம் என்றும், அது மில்லியன் கணக்கான மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதோடு, மனித இனத்திற்கே அச்சுறுத்தலாகவும் அமையக்கூடும் என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

மேலும் அணு ஆயுத போர்களால் வளிமண்டலத்தில் தீங்கு விளைவிக்கும் துகள்கள் பரவுவதால் சூரிய ஒளி தடுக்கப்பட்டு, அது உணவு நெருக்கடியை உருவாக்கி, பெரிய அளவிலான பஞ்சதுக்கு வழிவகுக்கும்.

இதுதவிர்த்து பருவநிலை மாற்றம், காற்று மாசுபாடு, குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு, உடல் பருமன் மற்றும் சர்வதேச உதவிகளை குறைப்பது ஆகியவையும் அச்சறுத்தலாக உள்ளன.

எச்சரிக்கை

இந்த உலகளாவிய சவால்கள் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதையும், அவற்றை எதிர்கொள்ள கூட்டு முயற்சிகள் அவசியம் என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

35 நிபுணர்கள் கொண்ட குழுவால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, ஜெர்மனியின் பெர்லினில் நடைபெறவிருக்கும் உலக சுகாதார உச்சிமாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

எதிர்காலம்

லான்செட் ஆணையத்தின் இணைத் தலைவரான பேராசிரியர் கிறிஸ்டோபர் முர்ரேயின் கூற்றுப்படி, "தலைவர்கள் இன்று எடுக்கும் முடிவுகளே எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் தீர்மானிக்கும்.

அரசாங்கங்கள் இந்த சவால்களை முன்கூட்டியே கணித்து, அவற்றை எதிர்கொள்வதற்காக உடனடியாக நிதி ஒதுக்கீட்டையும் வளங்களையும் ஏற்படுத்த வேண்டும்." என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT