உலகம்

சாக்கடல் ஏன் தொடர்ந்து உப்பாக மாறுகிறது? விஞ்ஞானிகள் கண்டுபிடித்த விசித்திர ரகசியம்!

2016-ல் அர்னான் குழு டபுள் டிஃப்யூஷன் கோட்பாட்டை சொன்னது, 2019-ல் ஒய்லான் குழு உறுதிப்படுத்தியது.

Dead Sea எனப்படும் சாக்கடலின் அடிப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 சென்டிமீட்டர் அளவிற்கு உப்புப் படிமங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதற்கான உண்மையான காரணத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

மறைந்திருந்த இந்த விசித்திரமான இயற்கை நிகழ்வை 'டபுள் டிஃப்யூஷன்' மற்றும் 'சால்ட் ஃபிங்கரிங்' என்ற கோட்பாடுகள் மூலம் 2016 மற்றும் 2019-ஆம் ஆண்டு ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இது உண்மையா?

ஆம். பொதுவாக வெயில் காலத்தில் கடலின் மேல்பகுதி நீர் ஆவியாவதால், மேலடுக்கு நீர் மட்டுமே அதிக உப்பாக மாறும்.

ஆனால், சாக்கடலில் தலைகீழாக, மேலடுக்கு நீர் உப்பை இழப்பதும், ஆழமான அடிப்பகுதி தொடர்ந்து புதிய உப்பைப் பெற்றுக்கொண்டே இருப்பதும் விஞ்ஞானிகளுக்குப் பெரிய புதிராக இருந்தது.

'சால்ட் ஃபிங்கரிங்' என்றால் என்ன?

கடலின் மேல் பகுதியில் சூரிய வெப்பத்தால் சூடான, அதிக உப்புத்தன்மை கொண்ட நீர் இருக்கும். கீழே குளிர்ந்த, குறைந்த உப்புத்தன்மை கொண்ட நீர் இருக்கும்.

இந்த இரண்டு அடுக்குகளும் சந்திக்கும் எல்லையில், விரல் போன்ற வடிவத்தில் நீர் துளிகள் மிகக் குறுகிய பாதையில் கீழ்நோக்கியும் மேல்நோக்கியும் நகரத் தொடங்குகின்றன.

மேலிருந்து கீழே இறங்கும் சூடான உப்பு நீர், கீழ் அடுக்கின் குளிர்ச்சியால் தன் வெப்பத்தை வேகமாக இழக்கிறது. ஆனால், அதன் உப்புத்தன்மை அப்படியே நீடிப்பதால், அது மிக அதிகப்படியான உப்பைக் கொண்டதாக மாறி, படிமங்களாக கடலின் அடிப்பகுதியில் படிந்து விடுகிறது.

கீழிருந்து மேலே செல்லும் குளிர்ந்த நீர், மேல் அடுக்கின் வெப்பத்தை வேகமாகப் பெறுகிறது. இதனால் அது உப்பைக் கரைக்கும் தன்மையைப் பெறுகிறது.

கணினி உருவகப்படுத்துதல் மூலம் உறுதி

2016-ல் 'அர்னான்' மற்றும் அவரது குழுவினர் இந்த 'டபுள் டிஃப்யூஷன்' கோட்பாட்டை முதன்முதலில் முன்வைத்தனர். பின்னர் 2019-ல் 'ஒய்லான்', 'லென்ஸ்கி' ஆகியோர் அடங்கிய மற்றொரு குழு, அதிநவீன கணினி மாடலிங் மூலம் ஆய்வகத்தில் இதைச் சோதித்துப் பார்த்தனர்.

இந்த சோதனையில், விஞ்ஞானிகள் கணித்தபடியே நீர் விரல்கள் போன்ற வடிவத்தில் உப்பு கீழே கடத்தப்படுவதும், அதுவே ஆண்டுக்கு 10 செமீ அளவிற்கு உப்பை அடிப்பகுதியில் சேர்க்கிறது என்பதும் 100% உறுதியானது.

வரலாற்று முக்கியத்துவம்

இந்தச் சிறிய அளவிலான நீர் சுழற்சி செயல்முறையானது, பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மத்திய தரைக்கடல் பகுதியில் எப்படி பிரம்மாண்டமான உப்புப் பாறைகள் உருவாகின என்பதைப் புரிந்துகொள்ளவும் தற்போதைய புவியியலாளர்களுக்குப் பெரிதும் உதவுகிறது.