உலகம்

ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்... ஜே.டி. வான்ஸ் கொடுத்த முக்கிய அப்டேட்

போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பு உலகளவில் பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது.

ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த முழு விவரங்கள் அடுத்த வாரம் வெளியாகலாம் என்றும், ஹார்முஸ் நீரிணை இந்த வாரம் திறக்கப்படலாம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜே.டி. வான்ஸ் நம்பிக்கை:

இதுகுறித்து சி.என்.பி.சி.-க்கு அளித்த நேர்காணலில் ஜே.டி. வான்ஸ் பேசும் போது, "ஹார்முஸ் நீரிணை எவ்வித கட்டணமும் இன்றி நீண்ட காலத்திற்கு திறக்கப்படும் என்று நம்புகிறோம்.

சமீபத்திய தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகளில் நாங்கள் எதிர்நோக்குகிறோம். இந்த விவகாரத்தில் ஒன்றாக அமர்ந்து விவாதித்து, முன்னோக்கி எடுத்து செல்ல பல்வேறு மிகமுக்கிய விவகாரங்கள் இடம்பெற்றுள்ளன," என்று தெரிவித்தார்.

பெரும் நிம்மதி:

ஹார்முஸ் நீரிணை திறப்பு குறித்த இருதரப்பிலும் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களாக போர் காரணமாக ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டது உலகளவில் பல நாடுகளில் பொருளாதாரம் மற்றும் பல்வேறு விதங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இறுதிக்கட்ட சிக்கல்கள் தீர்க்கப்பட உள்ள நிலையில் சுவிட்சர்லாந்தில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது நிகழ்வில் ஈரான் சார்பில் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் சபாநாயகர் கலந்து கொள்வார்கள் என்று ஜே.டி. வான்ஸ் மேலும் தெரிவித்தார். அமெரிக்கா சார்பில் இந்த நிகழ்வில் யார் கலந்து கொள்வார்கள் என்பது பற்றி அவர் எந்த தகவலும் வழங்கவில்லை.