உலகம்

64.5 கோடி மக்களுக்கு உணவில்லையெனில்?.. மனசாட்சியை உலுக்கும் உலக உணவு தினம்

நோய்களால் இறந்தவர்களை விட பசியால் உயிரிழப்பவர்களே அதிகம் என்றும் 10 பேரில் ஒருவர் எப்போதும் உணவின்றி தவிக்கிறார் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உணவின் முக்கியத்துவத்தை உணர்த்த இன்று உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது.

"தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்கிறார் பாராதியார். உணவு என்பது உயிர்வாழ்க்கையின் அத்தியாவசிய தேவை.

மனிதன் தொழில்நுட்பத்திலும் நாகரிகத்திலும் சமூக வளர்ச்சியிலும் எத்துணை தான் வளர்ந்தாலும் அடிப்படை தேவையான உணவு என்பது உலகில் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்திருக்கிறோமா என்றால் இல்லை.

உலக உணவு நாள்

உணவின் பாதுகாப்பையும், பசி, பட்டினியை போக்கவும் 1945ம் ஆண்டு அக்டோபர் 16ந்தேதி ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த நாளை நினைவு கூரும் விதமாக 1981ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16ந் தேதியை உலக உணவு நாளாக கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும் பசி, பட்டினியை போக்க வேண்டும் என்றும் அனைவருக்கும் சத்தான உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது.

உணவை வீணாக்காமல் தேவைப்படுவோருக்கு வழங்குவதே சிறந்த பணியாகும். ‘இன்றே புதுமையைப் புகுத்துங்கள்; எதிர்காலத்தை வளப்படுத்துங்கள்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து.

ஐநா பொதுச்செயலாளர் அழைப்பு

கடந்த ஆண்டு சுமார் 64.5 கோடி மக்கள் பசியால் வாடினர். அதே நேரத்தில் கிட்டத்தட்ட 270 கோடி மக்களால் ஆரோக்கியமான உணவை உண்ண முடியவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், உலக உணவு தினத்தை முன்னிட்டு தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஒன்றன்பின் ஒன்றாக நிகழும் நெருக்கடிகளும் அதிர்ச்சிகளும் உணவு உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிகளைச் சீர்குலைத்து, உணவு மற்றும் உரங்களின் விலையை அதிகரித்து, லட்சக்கணக்கான மக்களுக்குச் சத்தான உணவை எட்டாதவாறு செய்கின்றன என்று குட்ரெஸ் கூறினார்.

இந்த சவால்கள் இருந்தபோதிலும், அனைவருக்கும் உணவளிக்கத் தேவையான அறிவு, தொழில்நுட்பம் மற்றும் ஆற்றல் உலகத்திடம் உள்ளது. இந்த வளங்களை அர்த்தமுள்ள செயல்களாக மாற்றுவதற்குப் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

கொடிய எதார்த்தம்

உலக பட்டினி குறியீடு 2026 படி, உலக மக்கள் தொகையில் சுமார் 7.8% பேர் பசியை எதிர்கொள்கின்றனர்.

பசியால் தவிப்பவர்களில் 60 சதவீதம் பேர் பெண்கள் என்றும், காச நோய், மலேரியா மற்றும் எய்ட்ஸ் போன்ற நோய்களால் இறந்தவர்களை விட பசியால் உயிரிழப்பவர்களே அதிகம் என்றும் 10 பேரில் ஒருவர் எப்போதும் உணவின்றி தவிக்கிறார் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

2026ஆம் ஆண்டின் உலக பட்டினி குறியீட்டில் மொத்தம் உள்ள 122 நாடுகளில் இந்தியா 100வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவின் பட்டினி அளவு இன்னும் 'தீவிரம்' (Serious) என்ற பிரிவிலேயே நீடிக்கிறது.

வறுமை, போர், இயற்கை சீற்றம் மற்றும் இயற்கை பேரழிவு உட்பட பல காரணங்களால் உலக மக்களில் பலர் உணவின்றி தவித்து வருவது தொடர்கதையாக உள்ளது.

தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை, பசி எனும் தீயநோய் அணுகுவது கிடையாது என்ற திருக்குறள் வழி நிற்க வேண்டியதன் அவசியம் தற்கால தேவையாக உள்ளது.

SCROLL FOR NEXT