மசூதிகளுக்கு தீவைப்பு  
உலகம்

மேற்கு கரை: பாலஸ்தீனிய கிராமங்களில் புகுந்து இஸ்ரேலிய குடியேறிகள் வன்முறை.. மசூதிகளுக்கு தீவைப்பு

சுவர்களில் ஹீப்ரு மொழியில் "பழிவாங்குதல்" என்று எழுதி வைத்துவிட்டு தப்பியோடினர்.

பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்கும் முயற்சியில் இஸ்ரேல் தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே பல இஸ்ரேலிய குடும்பங்களை குடியேற்றிய நிலையில் மேலும் இஸ்ரேலியர்களை அங்கு குடியமர்த்த அண்மையில் அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

மேலும் மேற்கு கரையில் காலங் காலமாக வசித்து வரும் பாலஸ்தீன குடும்பங்களை விரட்ட அனைத்து முயற்சிகளிலும் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. அங்குள்ள இஸ்ரேலிய குடியேறிகள் அவ்வப்போது வன்முறையிலும் ஈடுபட்டு பாலஸ்தீனர்கள் அங்கிருந்து வெளியேற அழுத்தம் தந்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, அங்கு பாலஸ்தீன பெண்கள் மீதான பாலியல் வன்முறையையும் இஸ்ரேல் கட்டவிழ்துவிட்டு அவர்களை பயம் மூலம் அங்கிருந்து விரட்ட இஸ்ரேல் முயன்று வருவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.

இஸ்ரேல் ராணுவம்

மோதல்

இதற்கு மத்தியில் கடந்த ஜூலை 24ஆம் தேதி நப்லஸ் நகருக்கு அருகே பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய குடியேறிகள் மற்றும் ராணுவத்தினர் இணைந்து தாக்குதல் நடத்தினர்.

கிராம மக்கள் எதிர்த்துப் போராடியபோது குடியேற்றவாசிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாலஸ்தீனர்கள் திருப்பித் தாக்கிய நிலையில், இஸ்ரேலிய ராணுவம் நுழைந்து நடத்திய தாக்குதலில் 4 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்தனர். மோதலில் 2 இஸ்ரேல் வீரர்களும் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பென்யமின் நெதன்யாகு மேற்குக் கரை முழுவதும் தீவிர ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.

தால் கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட வீடுகளில் சோதனையிட்ட இஸ்ரேலியப் படையினர், 50க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களைக் கைது செய்தனர்.

ஒரே நாளில் மேற்குக் கரை முழுவதும் 80 பாலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாலஸ்தீன சிறைவாசிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

உயிரிழந்த 4 பாலஸ்தீனர்களின் அடக்கச் சடங்குகளும் கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையே நடத்தப்பட்டன.

மசூதிகளுக்கு தீவைப்பு

மசூதிகளுக்கு தீவைப்பு

மசூதிகளுக்கு தீ வைப்பு

இந்த சம்பவத்திற்கு பழிவாங்க, நேற்றுமுன் தினம் அதிகாலைஇஸ்ரேலியர்கள் ஆயுதங்களுடன் பாலஸ்தீன கிராமங்களுக்குள் புகுந்தனர்.

அங்கு வெறித்தனமாக தாக்குதல் நடத்திய அவர்கள், குஸ்ரா மற்றும் கூர் ஆகிய கிராமங்களில் உள்ள 2 மசூதிகளுக்கு தீ வைத்தனர். அங்கிருந்த பாலஸ்தீனியர்களின் கார்கள் மற்றும் விவசாய நிலங்களையும் தீயிட்டுக் கொளுத்தினர்.

சுவர்களில் ஹீப்ரு மொழியில் "பழிவாங்குதல்" என்று எழுதி வைத்துவிட்டு தப்பியோடினர். இதுதொடர்பாக விசாரித்து வரும் இஸ்ரேல் காவல்துறை சம்பவத்துடன் தொடர்புடைய 2 பேரை கைது செய்துள்ளது.

இந்த சம்பவத்தால் மேற்குக்கரை பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு, போர் பதற்றம் நிலவி வருகிறது.

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேலில் போராட்டம்

இதனிடையே இஸ்ரேலின் இடதுசாரி அமைப்பான 'ஹதாஷ்' மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் டெல் அவிவின் கப்லான் தெருவில் நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற போராட்டம் நடத்தப்பட்டது.

குடியேற்றவாசிகளின் வன்முறையைக் கண்டித்து 200க்கும் மேற்பட்டோர் தெருவில் இறங்கிப் போராடியதாக Mothers Against Violenceஅமைப்பு தெரிவித்துள்ளது.

போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் பலப்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், முன்அனுமதியின்றிப் போராட்டம் நடத்தியதாலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாலுமே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இஸ்ரேல் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவம்

மேற்கு கரை

2023இல் காசாவில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை மேற்கு கரையில் 1,182 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 13,000 பேர் காயமடைந்துள்ளனர்.

24,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை இஸ்ரேல் கைது செய்து சிறையிலடைத்துள்ளது என பாலஸ்தீன அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.