மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடான பின்லாந்துக்கு சென்று உள்ளார்.
அங்கு 'வளர்ந்து வரும் சக்திகள் மற்றும் புதிய புவிசார் அரசியல் போட்டி' குறித்த விவாத நிகழ்ச்சியில் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்றார்.
அப்போது அவரிடம் ஒரு நிருபர், ரஷியாவிடம் இந்தியா எண்ணை வாங்குவது குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு ஜெய்சங்கர் பதிலளித்து கூறியதாவது:-
நாங்கள் விலை மற்றும் கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் எண்ணையை வாங்குகிறோம். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் அந்நாடு மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது.
அதன்பிறகு ஐரோப்பிய நாடுகள் ரஷிய எரிசக்தி விநியோகத்தில் இருந்து விலகி, இந்தியாவின் பாரம்பரிய எண்ணெய் விநியோக ஆதாரமான மத்திய கிழக்கு நாடுகளை நோக்கித் திரும்பின. மத்திய கிழக்கிலிருந்து ஐரோப்பியர்கள் எண்ணெயை வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தனர்.
அந்தக் காலகட்டத்தில் சந்தையில் கிடைத்த எண்ணெயில் பெரும்பகுதி ரஷ்யாவிலிருந்தே வந்தது. இந்த சூழ்நிலைகள் எங்களை ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கித்தள்ளின. குறைந்த விலை மற்றும் எளிதாகக் கிடைக்கும் தன்மை காரணமாக 2022-ம் ஆண்டு முதல் இந்தியா ரஷிய எண்ணெய் வாங்கத் தொடங்கியது.
இந்தியாவின் எரிசக்தி கொள்முதல் முடிவுகள் தேசிய நலன் மற்றும் எரிசக்திப் பாதுகாப்பின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றன.
கடந்த 2022-ம் ஆண்டு உக்ரைன் போரின்போது ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்ததை தொடர்ந்து உலகளாவிய எரிசக்தி சந்தையை நிலைப்படுத்துவதில் இந்தியாவின் பங்கை அமெரிக்கா உணர்ந்தது.
எனவே உலகளாவிய பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், எண்ணெய் விநியோகத்தில் கடுமையான பாதிப்புகளைத் தவிர்க்கவும் ரஷிய கச்சா எண்ணெயை தொடர்ந்து வாங்குமாறு இந்தியாவிடம் அமெரிக்கா கேட்டு கொண்டது.
இந்தியாவின் ஆயுதங்களால் எந்தவொரு ஐரோப்பிய நாடும் தாக்கப்படவில்லை. ஆனால் இந்தியாவிற்கு எதிரான ஐரோப்பிய ஆயுதங்கள் விஷயத்தில் என்னால் அப்படிச் சொல்ல முடியவில்லை. ஐரோப்பாவால் விற்கப்படும் ஆயுதங்கள் இந்தியாவைத் தாக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
இது இப்போது மட்டுமல்ல, பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்தியர்களாகிய நாங்கள் ஐரோப்பாவிற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் எதையும் ஒருபோதும் செய்ததில்லை. இது ஒரு நியாயமான கருத்து என்று நான் கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.