கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையே போர் மூண்டது. மத்திய கிழக்கில் வெடித்த இந்த மோதலால் உலக நாடுகள் அனைத்தும் கடும் பாதிப்படைந்தன.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை என பல்வேறு நாடுகளில் விலைவாசி உயர்வு அதிகரித்தது. காரணம் ஈரான் உலகின் மிகப்பெரிய எண்ணெய் வழிப் போக்குவரத்தான ஹார்மூஸ் ஜலசந்தியை மூடியது.
இதனால் கச்சா எண்ணெய் வரத்துக் குறைந்து, எரிபொருள் மற்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தது. இந்த விலையேற்றத்தால், ஆட்டோ, டாக்ஸி, உணவு என அதன் தொடர்சங்கிலியில் இருந்த அனைத்தின் விலைகளும் ஏறின.
விலையேற்றத்தைத் தாண்டி, ஈரான், லெபனானில் உயிரிழப்புகள் அதிகரித்தன. இச்சூழலில்தான் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு ஒருவழியாக நேற்று ஈரான்-அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஹார்மூஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளது.
இதன்விளைவாக கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு இன்று சுமார் 80 டாலராக குறைந்தது. பிரென்ட் கச்சா எண்ணெய் கிட்டத்தட்ட 4% சரிந்து ஒரு பேரலுக்கு சுமார் 83.82 டாலராக விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை குறையுமா என மக்களிடத்தில் கேள்வி எழுந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் கச்சா எண்ணெய் இறக்குமதி தட்டுப்பாட்டல் பெட்ரோல்,டீசல் விலை பலமுறை எண்ணெய் நிறுவனங்களால் உயர்த்தப்பட்டது.
தற்போது கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிக்க உள்ளநிலையில் உயர்த்தப்பட்டதைப் போல் எரிபொருள்களின் விலை குறைக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.