உக்ரைனுக்கு எதிரான மோதலில் இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமான ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
2022 பிப்ரவரி முதல் 2026 செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், ரஷிய அரசாங்கப் பதிவுகளில் குறைந்தது 4,90,000 ராணுவ வீரர்களின் இறப்புகள் அதிகாரப்பூர்வமாகப் பதிவாகியுள்ளதாக, ரஷியாவின் ரோஸ்ஸ்டாட்டின் தரவுத்தளத்தை ஊடுருவிய இரண்டு ஹேக்கர் குழுக்கள் கண்டறிந்துள்ளன.
பெலாரஸ்ய எதிர்க்கட்சியுடன் தொடர்புடைய சைபர் பார்ட்டிசன்ஸ் என்ற ஹேக்கர் குழுவும், உக்ரேனிய ஹேக்கிங் குழுவான சைலன்ட் க்ரோவும் இந்தப் பதிவுகளைப் பெற்றுள்ளன.
இறப்புகளைப் பதிவு செய்வதில் காலதாமதம் மற்றும் போர்க்களத்தில் காணாமல் போய் உயிரிழந்திருக்கக்கூடிய வீரர்களின் எண்ணிக்கையையும் கணக்கில் கொண்டால், மொத்த உயிரிழப்பு 7,00,000 முதல் 7,20,000 வரை இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளனர்.
ரஷியாவும், உக்ரைனும் தங்கள் ராணுவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த விரிவான, அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை வெளியிடுவதை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றன.
உக்ரைனை விட ரஷியாவின் உயிரிழப்புகள் கணிசமாக அதிகமாக இருக்கும் என்று மேற்கத்திய மதிப்பீடுகள் நீண்ட காலமாகவே சுட்டிக்காட்டி வருகின்றன. மேலும், மே மாத தொடக்கத்திலேயே கிட்டத்தட்ட 500,000 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டதாக பிரிட்டிஷ் உளவுத்துறை மதிப்பிட்டிருந்தது.
அதிகரித்து வரும் உயிரிழப்புகள் குறித்த பொது விழிப்புணர்வு, தனது அரசுக்கு எதிராக உள்நாட்டு எதிர்ப்பை தூண்டுவிடும் என்பதற்காக வீரர்களின் உயிரிழப்பு எண்ணிக்கையை மறைக்க அதிபர் புதின் பல முயற்சிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் ரோஸ்ஸ்டாட் படிப்படியாக இறப்பு புள்ளிவிவரங்களை வெளியிடுவதை நிறுத்தியதுடன், கடந்த ஆண்டு புதிய மக்கள்தொகை புள்ளிவிவரங்களை வெளியிடுவதையும் நிறுத்தியது.
கசிந்த தரவுகளின்படி, இந்த எண்ணிக்கையில் போருடன் தொடர்பில்லாத ஏராளமான மரணங்களும் அடங்கியுள்ளன. மேலும் இறந்தவர்களின் பெரும்பாலானோர் ஆண்கள் என கூறப்படுகிறது. அவர்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு பேர் 30 முதல் 49 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தனர்.
கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த வீரர்கள் உட்பட, ரஷியா ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான ராணுவ உயிரிழப்புகளைத் தொடர்ந்து சந்தித்து வருவதாக மேற்கத்திய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
இந்த மாபெரும் இழப்புகள் மாஸ்கோவின் போர்க்களத் திறன்களில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. இதனால், கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தை முழுமையாகக் கைப்பற்றும் தனது முக்கிய நோக்கத்தை அடைவதில் புதின் போராடி வருகிறார்.
வாஷிங்டனைத் தளமாகக் கொண்ட சர்வதேச அமைதிக்கான கார்னகி அறக்கட்டளையின் ஆராய்ச்சியாளரான மைக்கேல் கோஃப்மேன், ரஷியா ஆட்சேர்ப்பு செய்வதை விட அதிகமான வீரர்களை இழந்து வருவதாக தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் புதிய வீரர்களை சேர்க்க ரஷிய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
ரஷியாவைப் போலவே உக்ரைனும் தனது ராணுவ பலத்தை இழந்துவருகிறது. மேலும் ரஷியாவைப் போலவே, தனது உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த விரிவான புள்ளிவிவரங்களை வெளியிடுவதை பெரும்பாலும் தவிர்த்து வருகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த வியூக மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் ஜூலை மாதம் வரை 150,000 உக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டிருந்ததாக மதிப்பிட்டது.
இந்தப்போரை வெளியில் இருந்து கவனிக்கும் சில அமைப்புகள், காணாமல் போன வீரர்களையும் சேர்த்து, மொத்த எண்ணிக்கை 200,000-ஐத் தாண்டும் என்று நம்புகின்றன.