பெருவெள்ளத்தால் அடித்து வரப்பட்ட தடிமனான சேற்றுச் சகதிக்குள் புதைந்து உயிருக்குப் போராடிய பல நாய்களை, உள்ளூர் மக்களும் மீட்புக் குழுவினரும் தீவிரமாகப் போராடி உயிருடன் மீட்டு வருகின்றனர்.
நேபாள நாட்டில் பெருவெள்ளப் பெருக்கு காரணமாகப் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் கரைபுரண்டு ஓடும் வெள்ளப்பெருக்கால் நூற்றுக்கணக்கான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு, பல குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றன. இந்த இயற்கைச் சீற்றத்தில் மனிதர்கள் மட்டுமின்றி, அவர்களுடன் வாழ்ந்த வளர்ப்புப் பிராணிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
முற்றிலும் சேதமடைந்த தங்களின் பழைய வீடுகளின் இடிபாடுகளுக்கு இடையே, காணாமல் போன உரிமையாளர்களின் வருகைக்காகச் செல்லப்பிராணிகள் தொடர்ந்து காத்துக்கிடக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி காண்போரின் நெஞ்சை பதற வருகின்றன.
துங்கே பகுதியில் வெள்ளத்தின் கோரத்தாண்டவத்தால் வீடுகள் அனைத்தும் முற்றிலுமாக உருக்குலைந்து போயின. அந்தப் பகுதியில் வசித்து வந்த 'லில்லி' என்ற வளர்ப்பு நாய், தன் கழுத்தில் இருந்த பட்டை மாறாமல், தனது வீடு இருந்த இடத்திலேயே அமர்ந்து காணாமல் போன தனது குடும்பத்தினருக்காகப் பல மணி நேரமாகக் காத்துக்கொண்டிருக்கிறது. சுற்றிலும் சகதியும் இடிபாடுகளும் நிறைந்த சூழலில், தன்னைக் காப்பாற்ற வரும் மீட்புக் குழுவினரைக் கண்ட பின்னரும் அந்த இடத்தை விட்டு நகர மறுக்கும் லில்லியின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
பெருவெள்ளத்தால் அடித்து வரப்பட்ட தடிமனான சேற்றுச் சகதிக்குள் புதைந்து உயிருக்குப் போராடிய பல நாய்களை, உள்ளூர் மக்களும் மீட்புக் குழுவினரும் தீவிரமாகப் போராடி உயிருடன் மீட்டு வருகின்றனர். கழுத்துவரை சேற்றில் மூழ்கிய நிலையிலும் நம்பிக்கையுடன் காத்திருந்த நாய்களைத் தூக்கி வெளியேற்றி, தண்ணீரில் கழுவி பராமரிக்கும் காட்சிகள் மனிதநேயம் இன்னும் சாகவில்லை என்பதை உணர்த்துகின்றன.
பேரிடருக்கு இடையே சில இடங்களில் பிரிந்துபோன செல்லப்பிராணிகளும் அவற்றின் உரிமையாளர்களும் மீண்டும் ஒன்றிணைந்த உருக்கமான நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன. வெள்ளத்தில் சிக்கி உயிருக்குப் போராடி மீண்ட நாய் ஒன்றை, அதன் உரிமையாளர் மீண்டும் நேரில் கண்டு கட்டியணைத்து அழும் காட்சிகள் மீட்புப் முகாம்களில் உணர்ச்சிப்பூர்வமான சூழலை உருவாக்கியுள்ளன. மனித உயிர்களைக் காப்பாற்றும் அதே வேளையில், தங்களின் அன்பிற்குரிய செல்லப்பிராணிகளையும் மீட்க வேண்டும் என்ற நேபாள மக்களின் கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.