சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும், கார்பன் உமிழ்வைக் குறைப்பதிலும் உலகப் புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வாகன் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளது.
போலந்து நாட்டில் உள்ள தனது பிரம்மாண்ட தொழிற்சாலையின் புல்வெளிகளைப் பராமரிக்க, மெஷின்களுக்குப் பதிலாக '100 ஆடுகளை' அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக 'வேலைக்கு' அமர்த்தியுள்ளது.
கார்ப்பரேட் உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள இந்தச் செய்தி, போலந்தின் 'போஸ்னான்' நகரில் அமைந்துள்ள வோக்ஸ்வாகன் உற்பத்தி ஆலை வளாகத்தில் இருந்து வெளியாகியுள்ளது.
வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் இந்த ஆலையை இயக்குவதற்காக, குவாண்டா எனர்ஜி நிறுவனத்தின் மூலம் 18.3 மெகாவாட் திறன் கொண்ட பிரம்மாண்ட 'சோலார் மின் உற்பத்தி நிலையம்' அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 31,000-க்கும் மேற்பட்ட சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தப் பேனல்களுக்கு அடியில் மிக வேகமாக வளரும் புற்களை வெட்டி அகற்றுவது பெரும் சவாலாக இருந்தது. வழக்கமாக இதற்கு பெட்ரோல் அல்லது டீசலில் இயங்கும் புல் வெட்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். இதனால் காற்று மற்றும் சத்த மாசுகள் ஏற்படுகின்றன.
இயந்திரப் பயன்பாட்டைக் குறைத்து கார்பன் உமிழ்வைத் தடுக்க, வோக்ஸ்வாகன் நிறுவனம் 'அக்ரிவோல்டாயிக்ஸ்' எனப்படும் விவசாயம் மற்றும் சூரிய ஆற்றலை ஒரே இடத்தில் இணைக்கும் நவீனத் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
இயந்திரங்களுக்குப் பதிலாக 100 ஆடுகள் இந்தச் சோலார் பண்ணைக்குள் கொண்டு வரப்பட்டு புற்களை மேயும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் இயந்திரங்களின் இரைச்சல், எரிபொருள் செலவு மற்றும் புகை மாசு முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. மேலும் ஆடுகளின் கழிவுகள் மண்ணிற்குச் சிறந்த இயற்கை உரமாக மாறுகின்றன.
சோலார் பேனல்கள் ஆடுகளுக்கு வெயிலில் இருந்து நல்ல நிழலைத் தருவதால், அவை சோர்வடையாமல் நிம்மதியாகப் புற்களை மேய்ந்து வருகின்றன.
ஆடுகள் புல் மேயும் இந்த வித்தியாசமான முயற்சியைப் வெறும் செலவுக் குறைப்பு திட்டமாக மட்டும் பார்க்காமல், 'போஸ்னான் உயிர் அறிவியல் பல்கலைக்கழகம்' இதைப் பெரிய ஆராய்ச்சித் திட்டமாக மாற்றி ஆய்வு செய்து வருகிறது.
சோலார் பேனல்களுக்கு அடியில் ஆடுகள் மேய்வதால் அங்குள்ள மண் வளம், பூச்சிகள் மற்றும் பறவைகளின் பல்லுயிர்ப் பெருக்கம் ) எவ்வாறு மேம்படுகிறது என்பதைப் பேராசிரியர்கள் கண்காணித்து வருகின்றனர்.
"நவீனத் தொழிற்துறையும் இயற்கையும் எப்படி ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பதற்கு இந்த ஆடுகள் வளர்ப்புத் திட்டம் ஒரு மிகச்சிறந்த உதாரணம்" என வோக்ஸ்வாகன் போஸ்னான் கிளையின் இயக்குநர் மர்சேனா பிலிச்-க்ரோன்ஸ்கா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.