அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நிரந்தர வசிப்பிட உரிமை பெறுவதற்காக காக்னிசன்ட் நிறுவனம் விசா மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து, காக்னிசன்ட் நிறுவனத்தின் நிரந்தர தொழிலாளர் விண்ணப்பங்களை அமெரிக்கா இடை நிறுத்தி வைத்துள்ளது.
காக்னிசன்ட் நிறுவனம் 1994-இல் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது இதன் தலைமையகம் அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியில் செயல்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் மிகப்பெரிய H- 1B நிதியுதவி வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசன்ட் நிறுவனம் உள்ளது.
இந்த நிறுவனம் திட்ட மின்னணு மறு ஆய்வு மேலாண்மை (PERM, Program Electronic Review Management) என்ற நடைமுறையின் மூலம் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அமெரிக்காவில் நிரந்தர வசிப்பிட உரிமையை (கிரீன் கார்டு) வாங்கி தருகிறது.
பெர்ம்(PERM) என்பது அமெரிக்க முதலாளிகள் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நிரந்தர வசிப்பிட உரிமையை வழங்குவதற்கு தொழிலாளர் துறையிடம் இருந்து, ஒப்புதல் பெறும் ஒரு செயல்முறையாகும்.
இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, அந்த வேலைக்கு தகுதியான நபர்கள் அமெரிக்காவில் யாரும் இல்லை என்பதை அமெரிக்க நிறுவனத்தின் முதலாளிகள் உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும் ஒரு வெளிநாட்டு தொழிலாளியை பணியமர்த்துவதன் மூலம் அமெரிக்க தொழிலாளர்களின் ஊதியமோ அல்லது அவர்களின் வேலைகளையோ எந்த வகையிலும் பாதிக்காது என்பதையும் முதலாளிகள் உறுதிப்படுத்த வேண்டும்.
அமெரிக்காவில் விசா மோசடி குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அதிபர் டொனால்டு டிரம்ப், தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நிரந்தர வசிப்பிட உரிமை வழங்குவதற்காக காக்னிசன்ட் மற்றும் கிளவுடெரா நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க தொழிலாளர் துறை அதிகாரி அந்தோனி எஸ்போசிட்டோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், காக்னிசன்ட் நிறுவனத்தின் பெர்ம் தாக்கல் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு கைவிலங்கு காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனங்களின் எச்-1பி மற்றும் பெர்ம் திட்டங்கள் தொடர்பான மோசடி குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை முடிவடையும்வரை, இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனம் தாக்கல் செய்யும் பெர்ம் விண்ணப்பங்கள் இடை நிறுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
இந்த விசா திட்டங்களை டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் எச்.சி.எல் போன்ற இந்திய ஐடி நிறுவனங்களும் சார்ந்திருப்பதால், இந்த நடவடிக்கை நிறுவனங்கள் மீதான கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.