அமெரிக்காவில் குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை அதிபர் டிரம்ப் நிர்வாகம் விதித்து வருகிறது. இதில் எச்-1பி விசா, மாணவர் விசா உள்ளிட்ட பல விசாக்களுக்கு புதிய விதிகளை கொண்டு வந்தது.
இந்த நிலையில் அமெரிக்காவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாட்டை கொண்டு வர பரிந்துரைக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவில் உயர்கல்வியை முடிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், ஒரு ஆண்டு வரை அங்குள்ள நிறுவனங்களில் பணி பயிற்சி பெற ஆப்சனல் பிராக்டிகல் டிரெயினிங் என்ற திட்டம் உள்ளது.
இதில் எப்-1 விசா வைத்திருக்கும் மாணவர்கள் படிக்கும் காலத்தில் வாரத்திற்கு 20 மணிநேரம் வரையிலும், பட்டம் பெற்ற பிறகு குறிப்பிட்ட காலத்திற்குப் பணிபுரியவும் முடியும்.
இதற்கு விண்ணப்பிக்க 500 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.48 ஆயிரம்) கட்டணமாக உள்ளது. இந்த கட்டணத்தை 70 ஆயிரம் அமெரிக்க டாலர்களாக (சுமார் ரூ.67 லட்சம்) உயர்த்த அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை முன்மொழிந்துள்ளது.
ஒரு வெளிநாட்டு மாணவர் ஓ.பி.டி திட்டம் மூலம் முதல் முறையாக சேர விண்ணப்பிக்கும்போது இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும். அறிவியல், தொழில்நுட்பம், என்ஜினியரிங், கணிதம் படித்த மாணவர்களுக்கு வழங்கப்படும்.
24 மாத நீட்டிப்புக்கு மேலும் 30 ஆயிரம் டாலர் (ரூ.29 லட்சம்) கட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை கூறும்போது, விசா மோசடிகளைத் தடுப்பது, குடியேற்ற அமைப்பின் நம்பகத்தன்மையை வலுப்படுத்துவது, அமெரிக்கத் தொழிலாளர்களைப் பாதுகாப்பது ஆகிய நோக்கங்களுக்காகவே இதுபோன்ற கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன.
வேலையளிப்பவர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் முறையான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் 31 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.