அமெரிக்க ராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல் 18 மாத பணிக்கு பிறகு பதவி விலகியுள்ளார். நேற்று தனது பணியில் கடைசி நாளாக இருக்கும் என அறிவித்திருந்தார்.
இந்த வாரம் தனது ராஜினாமாவை சமர்ப்பிப்பதற்கு முன்பாக அதிபர் டொனால்ட் டிரம்பிடம் ராணுவத்தின் நிலைமை குறித்து அவர் பேசியதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிரான ராணுவ தாக்குதல்களை அமெரிக்கா மீண்டும் தொடங்கியுள்ள சூழலில் இவரது விலகல் நிகழ்ந்துள்ளது.
துணை அதிபர் ஜே.டி. வான்ஸுக்கு நெருக்கமானவராகவும், நாடாளுமன்றத்தில் குடியரசு மற்றும் ஜனநாயக ஆகிய இரு கட்சிகளின் ஆதரவைப் பெற்றவராகவும் கருதப்படுபவர் டிரிஸ்கோல்
துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் நண்பரான டிரிஸ்கோலின் வெளியேற்றத்திற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இருப்பினும், பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் உடனான கருத்து வேறுபாடுகள் தான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த திங்களன்று வெள்ளை மாளிகை இவரது விலகலை உறுதிசெய்தது.
இதன்பிறகு பேசிய டிரிஸ்கோல், டிரம்ப் மற்றும் ஹெக்செத் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றியது வாழ்நாளின் பெருமை என்று குறிப்பிட்டுள்ளார்.
இவருக்குப் பதிலாக தற்காலிகமாகக்கூட யார் பொறுப்பேற்பார்கள் என்பது அறிவிக்கப்படவில்லை.
அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் அண்மை காலமாக சர்ச்சை நிலவி வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம், டிரிஸ்கோலின் ஆதரவாளராகக் கருதப்பட்ட ராணுவத்தின் உயர் அதிகாரி ஜெனரல் ரான்டி ஜார்ஜை பாதுகாப்புச் செயலாளர் ஹெக்செத் பதவியிலிருந்து நீக்கினார்.
அதைத் தொடர்ந்து தற்காலிக தலைமை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஜெனரல் கிறிஸ்டோபர் லாநேவ், டிரிஸ்கோல் ஆதரித்த டிரோன் நவீனமயமாக்கல் திட்டத்தை சமீபத்தில் ரத்து செய்தார்.
கடந்த ஆண்டு பொறுப்பேற்றதில் இருந்து, ஜெனரல் ஜார்ஜைத் தவிர 10க்கும் மேற்பட்ட மூத்த ஜெனரல்கள் மற்றும் அட்மிரல்களை எவ்வித விளக்கமும் அளிக்காமல் ஹெக்செத் பதவியிலிருந்து நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரிஸ்கோலின் ராஜினாமாவை தொடர்ந்து ஹெக்செத் மீது குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி என இரு கட்சிகளில் உள்ளவர்களாலும் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.