உலகம்

Ceasefire | லெபனான். இஸ்ரேல் இடையோன போர் நிறுத்தம் மேலும் 45 நாட்களுக்கு நீடிப்பு

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட் தெரிவித்தார்.

வன்முறை மீண்டும் அதிகரித்தபோதிலும், லெபனானும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை 45 நாட்களுக்கு நீட்டித்துள்ளதாக, மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்தது.

"மேற்கொண்டு முன்னேற்றம் காண்பதற்கு ஏதுவாக, ஏப்ரல் 16 அன்று அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்படும்," என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட் தெரிவித்தார்.

நிரந்தர அரசியல் உடன்பாட்டை எட்டுவதை நோக்கமாக கொண்ட பேச்சுவார்த்தைகளை அமெரிக்க வெளியுறவுத்துறை ஜூன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடத்தும் என்றும், பென்டகன் மே 29 அன்று இரு நாடுகளின் இராணுவ பிரதிநிதி குழுக்களை ஒன்றிணைக்கும் என்றும் அவர் கூறினார்.

"இந்தப் பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த அமைதியையும், ஒன்றின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மற்றொன்று முழுமையாக அங்கீகரிப்பதையும், அவற்றின் பொது எல்லையில் உண்மையான பாதுகாப்பை நிறுவுவதையும் முன்னெடுத்துச் செல்லும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று பிகாட் கூறினார்.

ஏற்கனவே நீட்டிக்கப்பட்டிருந்த போர் நிறுத்தம், ஞாயிற்றுக்கிழமை அன்று காலாவதியாக இருந்தது.

பேச்சுவார்த்தைகளின் போது இஸ்ரேல் மீண்டும் லெபனானில் உள்ள இலக்குகள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்திய நிலையில், தொடர்ச்சியான வன்முறை நிகழ்ந்தபோதிலும், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் லெபனான் ஆகிய நாடுகள் போர் நிறுத்தம் அமலில் இருப்பதாகக் கருதுகின்றன.

ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி எல்லை தாண்டிய மோதலைத் தூண்டியதும், வாஷிங்டனில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்காததுமான ஷியா குழுவான ஹிஸ்புல்லாவைத் தொடர்ந்து குறிவைப்போம் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.