ஈரானுக்கு எதிராக நடந்த போரின்போது, அமெரிக்க விமானத்திற்கு எரிபொருள் நிரப்ப சென்ற விமானம் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்த அமெரிக்க விமானிக்கு போரில் இறந்ததற்கான ஊதியம் வழங்கப்பட மாட்டாது என அமெரிக்கா தெரிவித்தது.
இதையடுத்து தனது குடும்பத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக விமானியின் மனைவி தெரிவித்ததையடுத்து, இறுதியில் அமெரிக்க அதிகாரிகள் அவருக்கு பதில் அளித்துள்ளனர்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு ஆதரவாக மேற்கு ஈராக்கில் எரிபொருள் நிரப்புவதற்காக கேசி-135 என்ற விமானம் மார்ச் 12-ல் சென்றது.
இந்த விமானத்தில் அமெரிக்க விமானி மேஜர் அலெக்ஸ் கிளின்னர் பயணம் செய்தார். அப்போது எரிபொருள் நிரப்பி கொண்டிருந்தபோது, அமெரிக்க விமானம் வெடித்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 33 வயதான அலெக்ஸ் கிளின்னர் உயிரிழந்தார். இதையடுத்து முறையான போர் பிரகடனம் அறிவிக்காததால், விபத்தில் உயிரிழந்த அமெரிக்க விமானிக்கு உரிய இழப்பீடு தர அமெரிக்கா மறுத்தது.
இதனால் விரக்தியடைந்த அமெரிக்க விமானியின் மனைவியான கிளின்னர், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “என் கணவர் போரில் உயிரிழந்தார். ஆனால் சட்டப்படி இது போர் இல்லை என என்னிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
துயரத்தில் இருக்கும் ஒரு குடும்பம் அரசாங்க செயல்முறைகளை சமாளிக்க தயாராக இல்லாத ஒரு தருணத்தில், அவற்றை சமாளிப்பது எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை இந்த அனுபவம் எனக்கு தெளிவுபடுத்தியது.
நினைத்துப் பார்க்க முடியாத இழப்பை சந்திக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரம்பத்திலிருந்தே அதே தெளிவு கிடைப்பதை உறுதி செய்வதில் இந்த உரையாடல் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
பின்தங்கியிருக்கும் குடும்பங்களுக்கு இதை சரியாகச் செய்வது ஒரு சிறு குறிப்பு அல்ல. நாம் இழந்தவர்களின் சேவையையும் தியாகத்தையும் கௌரவிக்கும் முறையின் ஒரு பகுதி இது” என்று கூறினார்.
அவர் தெரிவித்த கருத்து இணையத்தில் பரவியதை அடுத்து, அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் கிளின்னரை தொடர்பு கொண்டு, போர் தொடர்பான ஆபத்துக்கால ஊதியம் மற்றும் வரிச் சலுகைகள் ஆகியவை இதில் அடங்கி இருந்தன என கூறியனர்.
மேலும் உயிரிழந்த அமெரிக்க விமானியின் இறுதி சம்பள பட்டியலில், போர்க்கால ஊதியமாக மாதத்திற்கு 225 டாலர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அது தவறாக பட்டியிலிடப் பட்டிருந்ததாகவும் தெளிவுபடுத்தினர்.
இதையடுத்து வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கிளின்னர் குறித்து, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ்-இடம் கேட்கப்பட்டது.
அப்போது அவர், “நாங்கள் எங்களால் முடிந்தவரை அவருக்கு உதவவும், அவருக்கு உரிமையான அனைத்தையும் அவர் பெறுவதை உறுதி செய்யவும் விரும்புகிறோம்.
நாங்கள் உயிரிழந்த விமானி கிளின்னரை நேசிக்கிறோம். அவர் செய்த தியாகத்திற்கு நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். மேலும் அவருக்கு தேவையானதை பெற்று தரும், எங்கள் கடமையை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம்” என்று அவர் கூறினார்.