அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் குடியுரிமை மற்றும் பாஸ்போர்ட் விதிகளில் கடுமையான மாற்றங்களைக் கொண்டுவர டிரம்பின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பான விதிகளில் கடுமையான மாற்றங்களை கொண்டு வர அமெரிக்க வெளியுறவுத்துறை திட்டமிட்டுள்ளது. புதிய வரைவு வழிகாட்டுதலின்படி, இனி தங்களின் குழந்தைகளுக்கு அமெரிக்க பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும் பெற்றோர்கள், தங்களது சொந்த குடியுரிமை அல்லது சட்டப்பூர்வ அமெரிக்க வாழ்வுக்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகவே கிடைக்கும் 'பிறப்புரிமை குடியுரிமையை' கட்டுப்படுத்தும் நோக்கில் ஆகஸ்ட் 6 அன்று பிறப்பித்த நிர்வாக உத்தரவைச் செயல்படுத்தவே இந்த புதிய விதிகளை வெளியுறவுத்துறை வரைவு செய்துள்ளது. வெளிநாட்டினர் சுற்றுலா விசா மூலம் அமெரிக்கா வந்து குழந்தை பெற்று, அதன் மூலம் அக்குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை பெறுவதை தடுப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.
தற்போதைய நடைமுறைப்படி, அமெரிக்காவில் பிறந்த குழந்தைக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்போது பெற்றோர் தங்களின் அடையாளச் சான்றையும், குழந்தையுடனான உறவையும் நிரூபித்தால் போதுமானது. ஆனால் புதிய விதிகளின்படி, பெற்றோர்கள் தங்களின் குடியுரிமையை நிரூபிக்க அமெரிக்க பாஸ்போர்ட் அல்லது பிறப்பு சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். குடியுரிமை பெறாத சட்டப்பூர்வ குடியிருப்பாளர்கள் தங்களின் நிரந்தர குடியிருப்பு அட்டை அல்லது I-94 படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக மனித உரிமை அமைப்புகளும் வழக்கறிஞர்களும் ஏற்கனவே மேரிலாந்தின் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர். இந்த உத்தரவு அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது திருத்தத்திற்கு எதிரானது என்று எதிர்தரப்பினர் வாதிடுகின்றனர். இருப்பினும், நாட்டின் குடியுரிமை அமைப்பின் மதிப்பைப் பாதுகாக்கவும், முறைகேடுகளைத் தடுக்கவுமே இத்தகைய கட்டுப்பாடுகள் அவசியம் என டிரம்ப் நிர்வாகம் தனது முடிவை தீவிரமாக நியாயப்படுத்தி வருகிறது.