உலகம்

அமெரிக்கா - ஈரான் மீது புதிய பொருளாதார தடைகள்: "LPG" கடத்தல் மற்றும் "Shadow Banking" குறிவைப்பு

"ஈரானின் நிழல் கப்பல் படை, நிழல் வங்கி அமைப்புகள் மற்றும் சர்வதேச வர்த்தக அணுகலை முற்றிலும் துண்டிக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்ளும்" என்று தெரிவித்துள்ளார்"

அமெரிக்கா, ஈரானின் கியாஸ் சிலிண்டர் கடத்தல் வலையமைப்பு மற்றும் "Shadow Banking" எனப்படும் நிழல் வங்கி நிதி அமைப்புக்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, ஈரானின் வெளிநாட்டு வருவாய் ஆதாரங்களை முடக்குவதற்கான அமெரிக்காவின் முயற்சியின் ஒரு பகுதியாகும்.

அமெரிக்க கருவூலத் துறையின் தகவலின்படி, ஈரானில் உற்பத்தியாகும் LPG-யை "ஓமன் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கியாஸ் சிலிண்டர்" என போலியாகக் காட்டி தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வலையமைப்பின் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த வலையமைப்பு ஐக்கிய அரபு அமீரகம் , சீனா உள்ளிட்ட நாடுகளில் உள்ள போலி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு வங்கி கணக்குகளை பயன்படுத்தி பல மில்லியன் பேரல் கியாஸ் சிலிண்டரை கடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் கீழ், மார்ஷல் தீவுகள், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சீனாவைச் சேர்ந்த 12 நிறுவனங்கள் மற்றும் 6 கியாஸ் சிலிண்டர் கப்பல்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் நான்கு கப்பல்கள் பனாமா கொடியின் கீழ் இயங்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், ஈரானின் "Mehrdad Geramian Nik and Partners Co" என்ற பணமாற்று நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகிகளும் தடைகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நிறுவனம் ஏற்கனவே தடைகளுக்கு உட்பட்ட ஈரானிய வங்கிகளுக்காக நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் மதிப்பிலான வெளிநாட்டு நாணய பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட், "ஈரானின் நிழல் கப்பல் படை, நிழல் வங்கி அமைப்புகள் மற்றும் சர்வதேச வர்த்தக அணுகலை முற்றிலும் துண்டிக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்ளும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த புதிய தடைகள், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் நீடித்து வரும் சூழலில் அறிவிக்கப்பட்டுள்ளன. ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை குறைத்து, அதன் பொருளாதார மற்றும் இராணுவ நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது.