ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மீண்டும் வணிக கப்பல்கள் மற்றும் மாலுமிகளுக்கு எதிரான ஈரானின் மிரட்டல் திறனை மேலும் குறைக்கும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு ஹார்முஸ் ஜலசந்தி முக்கிய கடல்வழியாக திகழ்கிறது. இந்த கடல்வழியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து சுங்க கட்டணம் வசூலிக்க ஈரான் விரும்புகிறது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதாவும் தாக்கல் செய்துள்ளது.
அதேவேளையில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் போர் தொடங்குவதற்கு முன்னதாக, ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து எவ்வாறு இருந்ததோ, அதேபோன்று இருக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. ஆனால், ஈரான் இதற்கு சம்மதிக்கவில்லை. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் கடந்த இரண்டு வாரங்களாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களை தாக்குவதற்கு ஈரான் கட்டமைத்துள்ள டிரோன் தளங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. வியாழக்கிழமை இரவு 13-வது நாளாக புதிய தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஈரான் எண்ணெய் விநியோகம் செய்யமுடியவில்லை என்றால், எந்தவொரு நாடும் எண்ணெய் விநியோகம் செய்ய முடியாது என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் அதரவு பெற்ற ஹவுதி அமைப்பு, செங்கடலில் இரண்டு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்திக்கு அடுத்தபடியாக செங்கடல் மிகப்பெரிய கடல்வழி போக்குவரத்தாக திகழந்து வருகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் தொடர்பாக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 100 டாலர்களை தாண்டி விற்பனை ஆகிறது. தற்போது செங்கடலில் ஹவுதி தாக்குதல் நடத்தியுள்ளதால், கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே ஹவுதிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் எச்சரிக்கை விடுத்துள்ளார். "ஹவுதி மீண்டும் தாக்குதல் நடத்தினால், ஹவுதி ஈரானின் பிரதிநிதிகளாகவோ அல்லது பினாமி அமைப்பாகவோ செயல்படுவதால், அதற்கான பொறுப்பை ஈரான் ஏற்க வேண்டியிருக்கும். மேலும் ஈரான் மற்றும் ஹவுதிகள் ஆகிய இரு தரப்பினர் மீதும் கடுமையான ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
ஹவுதி அமைப்பினர் செங்கடலில் சென்று கொண்டிருந்து என்செலியா (Encelia) மற்றும் லேய்லா (Layla) ஆகிய இரண்டு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இரண்டு கப்பல்கள் தீப்பற்றி எரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், உயிரிழப்பு ஏற்பட்டதா? என்பது குறித்து தகவல் இல்லை.
Bab el-Mandeb ஜலசந்தி வழியாக செல்லும் சவுதி தொடர்பான கப்பல்களை முற்றுகையிடுவோம் என அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. Bab el-Mandeb அரேபிய தீப கற்பத்தில் செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவை இணைக்கும் செக் பாயிண்ட் ஆக உள்ளது. இதன் வழியாக 12 சதவீத உலக வர்த்தகம் நடைபெறுகிறது.